தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியாவின் 8ஆவது உலகக்கோப்பை கபடியும்... சேவாக்கின் சூப்பர் ட்வீட்டும்...! #IndiakabaddiworldCup - உலகக்கோப்பை கபடி குறித்து சேவாக் ட்வீட்

"கபடி என்பது இந்திய அணியின் விளையாட்டு, அந்த விளையாட்டின் ஆதிக்கத்தை நாங்கள் தொடரவைத்துள்ளோம். 2016 உலகக்கோப்பை கபடி தொடரை வென்றது என் வாழ்க்கையில் நடந்த சிறந்த தருணம்" - அஜய் தாக்கூர் (இந்திய கபடி அணியின் கேப்டன்)

Kabbadi world cup

By

Published : Oct 22, 2019, 11:04 PM IST

இந்திய அணி எட்டாவது முறையாக கபடி உலகக்கோப்பை வென்று இன்றோடு மூன்றாண்டு நிறைவடைந்தது. கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டின் உலகக்கோப்பை வெல்லும் சாம்பியன் அணிகளின் பெயர்கள் மாறலாம். ஆனால், உலகக்கோப்பை கபடிப் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணிதான் அன்றும் இன்றும் சாம்பியனாகத் திகழ்கிறது. அந்தவகையில், இந்த நாள் (அக்டோபர் 22) இந்திய கபடி ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள்.

2016ஆம் ஆண்டில் உலகக்கோப்பை கபடி தொடர் வழக்கமான ஸ்டைலில் இந்தியாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக் தொடரின் வருகையால், உலகக்கோப்பை கபடி போட்டிக்கு நல்ல ஆதரவு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. இந்தியா, அர்ஜென்டினா, ஈரான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஈரான் அணியுடன் மோதியது.

இந்தியா - ஈரான்

இதற்கு முன்னதாக, இந்திய அணி இரண்டு முறை (2004, 2007) ஈரான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதனால், இந்த வரலாற்றை தொடரவிடமால் மாற்றியமைக்கும் வகையில், ஈரான் அணி முதல் பாதியில் விளையாடியது. ஈரான் அணியின் ஆட்டத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அஜய் தாக்கூர் தலைமையிலான இந்திய அணி தடுமாறியது. முதல் பாதி முடிவில் இந்திய அணி 13-18 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்தது.

ஈரான் அணி

இதனால், சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியடையுமா அல்லது எழுச்சிப்பெற்று கோப்பையை வெல்லுமா என்ற பதற்றம் இப்போட்டியைப் பார்த்த ரசிகர்களுக்கு எழுந்தது. பொதுவாக, ஒவ்வொரு போட்டியின் சிறிய இடைவேளையில்தான் அணியின் வியூகங்கள் மாறும். பயிற்சியாளர்கள் தரும் அறிவுரை, கேப்டன்களின் எழுச்சிமிகுந்தப் பேச்சுகள் இவையெல்லாம் அணி வீரர்களுக்கு தன்னம்பிக்கையைத் தரும்.

இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய பயிற்சியாளர் பல்வான் சிங்

அப்படித்தான் இந்திய அணிக்கும் அன்றைய நாளில் அமைந்திருந்தது. கேப்டன் எப்போதும் மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதைப் போல, அஜய் தாக்கூர் இப்போட்டியின் இரண்டாம் பாதியில் மெர்சலாக விளையாடினார். இரண்டாம் பாதியில் அவர் ஒவ்வொரு முறையும் ரைடிங்கில் சென்றபோது, இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறும் என ரசிகர்களுக்கு நம்பிக்கைத் தோன்றியது.

ஏனெனில், ரைடிங்கில் சென்ற அஜய் தாக்கூர் ஒவ்வொரு முறையும் புள்ளிகளைப் பெற்றுவந்தார். இதனால், ஒருகட்டத்தில் ஆட்டம் 20-20 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. அப்போது ஆட்டம் முடிய இன்னும் 12 நிமிடங்கள் மட்டுமே இருந்தன. அஜய் தாக்கூரினால் இந்திய ரசிகர்களுக்கு ஒருபக்கம் நம்பிக்கையிருந்தாலும், மறுபக்கம் இந்த 12 நிமிடங்களில் போட்டியின் முடிவு எப்படி இருக்குமோ என்ற டென்ஷனும் ரசிகர்கள் மத்தியில் எகிறியது.

ரைடிங்கில் மாஸ்காட்டிய அஜய் தாக்கூர்

அஜய் தாக்கூர் ரைடிங்கில் மீண்டும் ஒரு புள்ளியை எடுத்தார். அவரைப் போன்று மற்ற இந்திய அணி வீரர்களும் போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, முதல் பாதியில் மோசமாக இருந்த இந்திய அணியின் டிஃபெண்டிங், இரண்டாம் பாதியில் சிறப்பாக இருந்தது. இதனால், ஈரான் அணி ஆல் அவுட்டாக, இந்திய அணி மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கத் தொடங்கியது. அதன்பின் களத்தில் நடந்ததெல்லாம் இந்திய அணியின் வழக்கமான மேஜிக்தான்.

வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் அஜய் தாக்கூர்

போட்டி முடிய கடைசி மூன்று நிமிடம் இருந்த நிலையில் மீண்டும் ரைடிங்கில் சென்ற அஜய் தாக்கூர் ஈரான் அணியை ஆல் அவுட்டாக்க, இந்திய அணி 38-29 என்ற புள்ளிகள் கணக்கில் எட்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய அணியின் போராட்ட குணத்துக்கு ரசிகர்கள், மற்ற விளையாட்டு நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்தியா சாம்பியன்

"கபடி என்பது இந்திய அணியின் விளையாட்டு, அந்த விளையாட்டின் ஆதிக்கத்தை நாங்கள் தொடரவைத்துள்ளோம். 2016 உலகக்கோப்பை கபடி தொடரை வென்றது என் வாழ்க்கையில் நடந்த சிறந்த தருணம்" என போட்டி முடிவடைந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் உணர்ச்சிகரமாகக் கூறினார்.

மேற்கூறியதைப் போலவே கபடியில் இந்திய அணியின் ஆதிக்கம் மாறியதாக சரித்திரமே இல்லை. ஏனெனில், இதுவரை நடைபெற்ற எட்டு உலகக்கோப்பை கபடித் தொடரின் சாம்பியனும் இந்திய அணிதான். இப்போட்டியின் மற்றொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் சேவாக்கின் ட்வீட்தான். 2016இல் இந்திய வீரர் சேவாக்கும் இங்கிலாந்தின் விளையாட்டுப் பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கனுக்கும் ட்விட்டரில் மோதில் ஏற்பட்டது.

இந்திய அணியின் விளையாட்டை மட்டம்தட்டும் வகையில் ட்வீட் செய்த பியர்ஸ் மோர்கனுக்கு சேவாக் நோஸ்-கட் தரும்வகையில் தக்க பதிலடி கொடுத்தார். இந்திய அணி உலகக்கோப்பை கபடியை வென்ற பிறகு சேவாக், 'கபடி போட்டியைக் கண்டுபிடித்த இந்திய அணி எட்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது. மற்ற இடங்களில் கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு எழுத்துப்பிழைகளை சரிசெய்வதில் மட்டுமே சிறந்து விளங்குகிறது' எனக் கிண்டலாகப் பதிவிட்டார்.

முன்னதாக, சேவாக்கின் ட்வீட்டிலிருந்த எழுத்துப்பிழையை பியர்ஸ் மோர்கன் சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றதில்லை என்ற வகையில்தான் சேவாக்கின் ட்வீட் எடுத்துக்கொள்ளப்பட்டது.

எட்டாவது முறை உலக சாம்பியன் ஆன இந்தியா

அதன்பிறகு, இங்கிலாந்து அணி நடப்பு ஆண்டில் உலகக்கோப்பையை வென்றாலும் அது ஐசிசியின் விதிமுறைப்படிதான் கிடைத்தது என்பதே நிதர்சனம். கிரிக்கெட்டில் உலகக்கோப்பை சாம்பியன் வென்ற அணிகளின் பெயர்கள் மாறினாலும், அன்றும், இன்றும் உலகக்கோப்பை கபடி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் பெயர் மாறாமல்தான் இருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details