உலகின் மிக அதிக வயதான ஒலிம்பிக் வீராங்கனையாக அறியப்படுபவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆக்னஸ் கெலெட்டி. 1921ஆம் ஆண்டு ஹங்கேரியாவின் புத்தாபெஸ்ட் நகரில் பிறந்த கெலெட்டி, இரண்டாம் உலகப்போர் காரணமாக 1941 மற்றும் 1944ஆம் ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.
அதன்பின் 1948ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் அறிமுகமாக இருந்த கெலெட்டி, காயம் காரணமாக அதிலிருந்து விலகினார். பின்னர் 1952ஆம் ஆண்டு பின்லாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தனது 30ஆவது வயதில் அறிமுகமானார்.
அந்த ஒலிம்பிக் தொடரில் கெலெட்டி ஜிம்னாஸ்டிக் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என நான்கு பதக்கங்களைப் பெற்று சாதனைப் படைத்தார். அதையடுத்து 1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கம், இரண்டு வெள்ளிப்பதக்கங்களை கைப்பற்றி சாதித்தார்.