ஹாங்சோ (சீனா): ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023, சீனாவின் ஹாங்சோ நகரில் சுவாரஸ்யம் குறையாமல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (அக்.7) நடைபெற்ற வில்வித்தை ஆடவர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய வில்வித்தை வீரர் ஓஜஸ் டியோடல் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதேநேரம், இதே வில்வித்தை ஆடவர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
தங்கப்பதக்கத்திற்கான ஆட்டத்தில், 148-147 என்ற கணக்கில் ஓஜஸ் டியோடல் முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியின் வில்வித்தை பிரிவுகளான காம்பவுண்ட் ஆடவர் குழு, காம்பவுண்ட் கலப்புக் குழு மற்றும் தனிநபர் காம்பவுண்ட் ஆகிய மூன்று பிரிவுகளிலும் ஓஜஸ் டியோடல் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்து உள்ளார். மேலும், இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியின் வில்வித்தை பிரிவில் 9 பதக்கங்களை வென்று இருக்கிறது.
மேலும், இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள X சமூக வலைத்தளப் பதிவில், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான காம்பவுண்ட் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த ஓஜஸ் டியோடலுக்கு வாழ்த்துகள். அவரது துல்லியமான உறுதிப்பாடு மற்றும் அசைக்க முடியாத கவனம் ஆகியவற்றை மீண்டும் செய்து நம் தேசத்தை பெருமைப்படுத்தி உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல், “தனிநபர் காம்பவுண்ட் வில்வித்தை ஆடவர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அபிஷேக் வர்மாவுக்கு வாழ்த்துகள். அவரது திறமையும், விளையாட்டு மனப்பான்மையும் அதிகளவில் பிரகாசிக்கின்றன, மேலும் இந்த சாதனையால் இந்தியாவே சிலிர்க்கிறது” என வெள்ளிப்பதக்கம் வென்ற அபிஷேக் வர்மாவையும் பிரதமர் மோடி வாழ்த்தி உள்ளார். மேலும், வரலாற்றிலேயே முதல் முறையாக 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என 100 பதக்கங்களை இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டியில் குவித்து சாதனை படைத்து உள்ளது.
இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறையாக 100 பதக்கங்களை வென்ற இந்தியா - பிரதமர் மோடி வாழ்த்து!