சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது. இதில், நடைபெற்ற மகளிர் 10 மீ ஏர் ரைஃபிள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இந்நிலையில், ஆடவர் 50 மீ ரைஃபிள் தனி நபர் பிரிவுக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
#ISSFWORLDCUP: நூலிழையில் தங்கப் பதக்கத்தை நழுவ விட்ட இந்திய வீரர்! - துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் ஆடவர் 50 மீ ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் 0.02 புள்ளி வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை இழந்தார்.

இதில், இந்தியா சார்பாக பங்கேற்ற சஞ்சீவ் ராஜ்புட் 462 புள்ளிகளை பெற்றார். ஆனால், 0.2 புள்ளிகள் வித்தியாசத்தில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்ததால் வெள்ளிப் பதக்கம் மட்டுமே அவருக்கு கிடைத்தது. இந்தத் தொடரில் இந்தியா பெறும் இரண்டாவது பதக்கம் இதுவாகும். இதில், குரோஷியாவின் பீடர் கோர்சா தங்கம் வென்றார். சீனாவின் சங்ஹோங் ஸாங் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இப்போட்டியில், சஞ்சீப் ராஜ்புட் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். முன்னதாக, இவர் காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.