சீனாவின் வூஹான் நகரில் தொற்றிய கொவிட்-19 வைரஸ் (கொரோனா வைரஸ்) அந்நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயால் இதுவரை 2,715 பேர் உயிரிழிந்துள்ளதாகவும், 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாகவும், சீன அரசு தெரிவித்துள்ளது. இதனால், சீனாவில் நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டன. மேலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவிவந்தால் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவின.
இதையடுத்து, கொரோனா வைரஸ் காரணமாக வரும் மார்ச் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரிலிருந்து சீனா, வடகொரியா, ஹாங்காங் உள்ளிட்ட ஆறு அணிகள் விலகியுள்ளதாக இந்திய துப்பாக்கிச் சுடுதல் சங்கம் நேற்று தெரிவித்தது. இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் ஒலிம்பிக் டெஸ்ட் போட்டி டோக்கியோவில் ஏப்ரல் 16 முதல் 26 வரை நடைபெறவுள்ளது. இதில், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் பங்கேற்று தங்களைத் தயார் படத்தவுள்ளனர்.