டெல்லி: டோக்கியோ 2020 ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 127 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இத்தொடரில், இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என ஏழு பதக்கங்களைப் பெற்று இருந்தது. இதில் ஈட்டி எறிதலில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, இறுதிப்போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி தங்கப்பதக்கத்தை வென்றார்.
வைரலாகும் காணொலியால் சர்ச்சை
இந்த வரலாற்று வெற்றிக்கு முன்னர், அவர் தனது ஈட்டியைத் தேடி அலைந்த காணொலி தற்போது வைரலாகிவருகிறது. சகப் போட்டியாளரான பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதீமிடம் இருந்த தனது ஈட்டியை எடுத்துக்கொண்டு, போட்டி மையத்தை நோக்கி, நீரஜ் வேகமாக சென்று தனது முதல் வீச்சை வீசியதுதான் இதில் ஹைலைட் .
நீரஜ் விளக்கம்
இந்தக் காணொலியை வைத்து, பாகிஸ்தான் வீரர் உள்நோக்கத்துடன் இந்த செயலை செய்தாரா?, எனும் நோக்கில் ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நதீம் மீது சமூக வலைதளங்களிலும் பல விமர்சனங்கள் குவிந்தவண்ணம் இருந்தன.
நதீம் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தற்போது நீரஜ் சோப்ரா பதிலளித்துள்ளார்.
"உங்களின் சுயலாபத்திற்கும், விளம்பரத்திற்கும் தயவுசெய்து, என்னையும் எனது கருத்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் இருக்கவேண்டும் என்பதையே விளையாட்டு நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
எனது சமீபத்திய கருத்துகள் குறித்து, பொதுமக்களிடமிருந்து சில தவறான எதிர்வினைகளைப் பார்த்து நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.
போட்டியில் மட்டுமே மோதல்
நான் சமீபத்திய ஒரு பேட்டியில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் என்னுடைய ஈட்டியைப் பயன்படுத்தினார் என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதில் ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆட்ட விதிமுறைப்படி எல்லா வீரர்களும் பிறரின் ஈட்டிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். அவர் எனது ஈட்டியை எடுத்து போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.
எனது வீச்சு முறைக்காகத்தான் அவரிடம் இருந்து எனது ஈட்டியை வாங்கினேனே தவிர, அவர் செய்தது தவறு ஒன்றும் இல்லை.
இதைப் பெரிய பிரச்னையாக்க வேண்டாம். வீரர்களாகிய நாங்கள் போட்டியில் மோதிக்கொள்வோம்" எனக் கூறியுள்ளார்.
நதீமிடம் இருந்து ஈட்டியை வாங்கிக்கொண்டு அவசரமாக அவர் வீசிய முதல் வீச்சில் 87.03 மீட்டர் தூரத்திற்கு எறிந்து அசத்தியிருந்தார், நீரஜ் சோப்ரா. இதற்கு அடுத்த வீச்சில் 87.58 மீட்டருக்கு வீசி இந்தியாவிற்கான தங்கப்பதக்கத்தை உறுதிசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Tokyo Paralympics: பவினாபென் படேல் ரவுண்ட் ஆஃப் 16க்கு முன்னேற்றம்