ஓரிகன்:உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள யூஜின் கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று (ஜூலை 24) காலை நடைபெற்றது.
இப்போட்டியில், கடந்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மற்றொரு இந்திய வீரர் ரோஹித் யாதவ் ஆகியோர் உள்பட 12 பேர் பங்கேற்றனர். போட்டியில் மொத்தம் 6 வாய்ப்புகள் அளிக்கப்படும். மேலும், முதல் மூன்று வாய்ப்புகளுக்கு பின்னர், முதல் எட்டு இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு மட்டுமே அடுத்த மூன்று வாய்ப்புகள் அளிக்கப்படும்.
ஆண்டர்சன் அட்டகாசம்:12 வீரர்களில் முதலாவதாக நீரஜ் சோப்ரா வீசினார். நீரஜ் தனது முதல் த்ரோவை ஃபவுலாக்கினார். தொடர்ந்து, நடப்பு சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதல் த்ரோவிலேயே 90.21 மீ., தூரத்திற்கு வீசி முன்னிலை பெற்றார். தொடர்ந்து, நீரஜ் 2ஆவது, 3ஆவது வாய்ப்பில் முறையே 82.39 மீ., 86.37 மீ., வீசி போட்டியில் நான்காவது இடத்தில் நீடித்தார். ஆண்டர்சன் தனது இரண்டாவது வாய்ப்பில் 90.46 மீ. வீசி தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
இறுதிப்போட்டியில் இரண்டாமிடம் பிடித்த நீரஜ் நம்பிக்கையளித்த நான்காவது த்ரோ: நீரஜ் தனது 4ஆவது த்ரோவில் 88.13 மீ., வீசி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். இருப்பினும், கடைசி இரண்டு த்ரோக்களுக்களும் ஃபவுலானது. எனவே, நீரஜ் சோப்ரா 88.13 மீ., தூரம் வீசிய நிலையில், இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
கிரெனடா நாட்டைச் சேர்ந்தவரும், நடப்பு சாம்பியனுமான ஆண்டர்சன் பீட்டர்ஸ் தனது கடைசி த்ரோவில் 90.54 மீ., வீசி தங்கப் பதக்கத்தை தக்கவைத்தார். ஆண்டர்சன் 90.21 மீ., 90.46 மீ., 90.54 மீ., என மூன்று முறை 90 மீ., தாண்டி வீசி அசத்தினார். செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஜக்குப் வட்லெஜ்ச் 88.09 மீ., வீசி வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.
நீரஜ் சோப்ரா, ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜக்குப் வட்லெஜ்ச் ரோஹித்துக்கு 10ஆவது இடம்:இந்தியாவின் மற்றொரு வீரரான ரோஹித் யாதவ், தனது முதல் மூன்று வாய்ப்புகளில் 77.96 மீ., 78.05 மீ., 78.82 மீ., வீசி பத்தாம் இடம் பிடித்து, அடுத்த மூன்று வாய்ப்புகளை இழந்தார்.
19 ஆண்டுக்கால தாகம்: 2003ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ் மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார். அதுவே, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா வென்ற முதல் பதக்கம். அதன்பின், தற்போதுதான் இந்தியா சார்பாக ஒருவர் பதக்கம் பெறுகிறார். நீரஜ் வென்ற இந்த வெள்ளி உள்பட இந்தியா மொத்தம் 2 பதக்கங்களை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீரஜ் சோப்ராவின் ஆறு வாய்ப்புகள்:
- முதலாவது வாய்ப்பு - ஃபவுல்
- 2ஆவது வாய்ப்பு - 82.39 மீ.,
- 3ஆவது வாய்ப்பு - 86.37 மீ.,
- 4ஆவது வாய்ப்பு - 88.13 மீ.,
- 5ஆவது வாய்ப்பு - ஃபவுல்
- 6ஆவது வாய்ப்பு - ஃபவுல்
இதையும் படிங்க:ஈட்டி தூக்கி நின்னான் பாரு.. இவன வெல்ல யாரு.... சரித்திர நாயகன் நீரஜ் சோப்ரா!