ஸ்டாக்ஹோம்:கடந்தாண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் தடகள போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், தனது தேசிய சாதனையை ஒரு மாதத்திற்குள் மீண்டும் முறியடித்து சாதனை படைத்துள்ளார். தனது முதல் வாய்ப்பில் 89.94 மீட்டர் தூரத்திற்கு வீசி இந்த சாதனையை படைத்தார்.
அடுத்த ஐந்து வாய்ப்புகளில் 84.37மீ, 87.46மீ, 84.77மீ, 86.67மீ, 86.84மீ என வீசி அசத்தியிருந்தாலும் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். கிரெனடா நாட்டைச் சேர்ந்தவரும், உலக சாம்பியனுமான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 93.07 மீட்டர் தூரத்திற்கு வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். முன்னதாக, பின்லாந்தில் நடைபெற்ற மற்றொரு தொடரான குர்டோன் விளையாட்டு போட்டியில், நீரஜ் 86.69 மீட்டருக்கு எறிந்து தங்கத்தை வென்றார்.