சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாகக் கூறப்படும் கோவிட்-19 (கொரோனா) என்ற வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்திவரும் இந்த வைராஸ் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதன் விளைவாக, டென்னிஸ், கால்பந்து, ரக்பி, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டும், நிறுத்தி வைக்கப்பட்டும் உள்ளன. தற்போது அந்த வரிசையில், அமெரிக்காவில் பிரபலமான என்.பி.ஏ கூடைப்பந்து போட்டியும் இணைந்துள்ளது.
நடப்பு சீசனுக்கான நேற்றைய ஆட்டத்தில் ஜாஸ் - தண்டர் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெறவிருந்தது. போட்டிக்கு முன்னதாக ஜாஸ் அணியைச் சேர்ந்த ருடி கோபர்டிற்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், நடப்பு சீசன் போட்டிகள் தற்காலிகமாக நிறித்தி வைக்கப்பட்டுள்ளதாக, என்பிஏ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.