மத்திய அரசால் விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு, பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை தேசிய விளையாட்டு விருதுகள் தேர்வுக்குழு இன்று (ஆக.18) வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா மற்றும் கடந்த 2016ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு ஆகியோரின் பெயர்களை இந்தாண்டிற்கான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக, தேசிய விளையாட்டு விருதுகள் தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு, அத்தொடரில் 648 ரன்களை குவித்தார். இதன் காரணமாக ரோஹித் சர்மாவின் பெயர் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றதற்காகவும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதற்காகவும் இவ்விருதுக்கு அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனையான மனிகா பத்ரா, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இரு தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் காரணமாக, இந்தாண்டுக்கான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு மனிகா பத்ராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, சென்ற 2016ஆம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். மேலும் அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கும் தகுதி பெற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்தாண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு மாரியப்பன் தங்கவேலுவின் பெயரை, தேசிய விளையாட்டு விருதுகள் தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதையும் படிங்க:‘தோனியைப் போன்று மற்றொருவர் கிடையாது’- மிதாலி ராஜ்!