இந்தச் செயலி தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பற்றிய தகவல்களை வீரர்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீரர்களுக்கும் தேசிய ஊக்கமருந்து தடுப்பாணையத்திற்கும் இடையே நல்லுறவு ஏற்படும். அதேசமயம் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து எனத் தெரியாமல், அதனைப் பயன்படுத்தும் வீரர்களின் கவனக்குறைவை இந்தச் செயலி தடுக்கும் எனக் கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன்களில் அறிமுகமான நாடா செயலி! - தேசிய ஊக்கமருந்து தடுப்பாணையம் செயலி
டெல்லி: தேசிய ஊக்கமருந்து தடுப்பாணையத்தின் (நாடா) செயலியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினார்.
இந்தச் செயலியை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜூ, "நாடாவின் இந்த அற்புதமான முன்னெடுப்பை நான் வரவேற்கிறேன். தூய்மையான விளையாட்டை நோக்கி பயணித்துவருகிறோம். அதற்கு இந்தச் செயலி விளையாட்டுத் துறையில் முக்கியப் படிக்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் தடகள வீரர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளின் பட்டியலை மற்றவர்களின் உதவியை நாடாமல் தானாகவே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன்மூலம் வீரர்கள் எந்தந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும், எதனை எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படும். பிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவை நிறைவேற்ற மற்றொரு முக்கியமான நடவடிக்கையான இந்தச் செயலியை அறிமுகப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" எனத் தெரிவித்தார்.