வடக்கு அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் என்பிஏ கூடைப்பந்தாட்ட போட்டித் தொடர் மிகவும் பிரபலமான ஒன்று. கடந்த 1946ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த லீக் தொடர் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 29 அணிகள், கனடாவைச் சேர்ந்த ஒரு அணி உட்பட 30 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக ப்ரீ-சீசன் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்தியாவிலும் இந்த கூடைப்பந்தாட்ட ரசிகர்களுக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த கூடைப்பந்தாட்ட தொடரை இந்தியாவில் பிரபலப்படுத்தும் நோக்கில் இரண்டு ப்ரீ-சீசன் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும் என்று கடந்தாண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. மேலும் மும்பையில் அக்டோபர் 4, 5 தேதிகளில் சாக்ரோமெண்டோ கிங்ஸ் மற்றும் இண்டியானா பேசர்ஸ் ஆகிய அணிகள் மும்பையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இதை பிரபலப்படுத்தும் விதமான தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவந்தன.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அணிகளின் வீரர்கள், இந்திய இளம் வீரர் வீராங்கனைகளுடன் பயிற்சி செய்வது, அவர்களுக்கு கூடைப்பந்தாட்டம் குறித்த அறிவுரை வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் சமீபத்தில் அமெரிக்காவின் ஹோஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மற்றுமொரு அமெரிக்க பொருளான என்பிஏ தொடர் இந்தியாவுக்கு கிடைக்கப்போகிறது என்று தெரிவித்திருந்தார்.