இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையாக வலம்வருபவர் மேரி கோம். 37 வயதான மேரிகோமிற்கு மூன்று மகன்கள் உள்ளனர். தற்போது உலகையே அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள கரோனா, பெருந்தொற்றினால் உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேரிகோமின் இளைய மகனான பிரின்ஸ் சுங்தாங்லென் கோம்மின் (Prince Chungthanglen Kom) பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி காவல் துறையினர் அச்சிறுவனுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில், மேரி கோமின் வீட்டிற்கே சென்று கேக் வெட்டி, சிறுவனின் பிறந்த நாளை சிறப்பானதாக மாற்றினர்.
இதனையடுத்து மேரி கோம், தனது மகனின் பிறந்த நாளை சிறப்பித்த காவல் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், 'எனது இளைய மகன் பிரின்ஸ்கோமின் பிறந்த நாளை சிறப்பானதாக மாற்றியமைத்த டெல்லி காவல் துறையினருக்கு எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன். நீங்கள் அனைவரும் நம் நாட்டின் உண்மையான முன்னணி வீரர்கள், மேலும் உங்களது அர்ப்பணிப்பிற்காக நான் தலை வணங்குகிறேன்' என்று பதிவிட்டு, காவல் துறையினருடன் இணைந்து, தனது மகன் பிறந்த நாளைக் கொண்டாடிய காணொலியையும் இணைத்துள்ளார்.
இந்திய பெண்களின் முன்மாதிரியாக விளங்கும் மேரி கோம், இதுவரை அனைத்து வகையிலான சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றியை ஈட்டியவர் என்ற பெருமையைப் பெற்றவர்.
மேலும் இவர், ஐந்து முறை ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கத்தையும், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் வெண்கலப் பதக்கத்தையும், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தலா ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்று, இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மெஸ்ஸியா? ரொனால்டோவா? பிடித்த வீரரைத் தேர்வு செய்த லிவர்பூல் மேனேஜர்...!