ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்தாண்டு நடைபெறுகின்றன. இதில் குத்துச்சண்டைப் பிரிவில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சீனாவின் வூகான் நகரில் நடைபெறுகிறது.
இதனிடையே இந்தத் தகுதிச் சுற்றில் இந்திய அணி சார்பில் கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் டெல்லியில் நேற்று தொடங்கின. இதில் மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் மேரி கோம், ரிது க்ரேவாலை வீழ்த்தினார். இதையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் இளம் வீராங்கனை நிகாத் ஜரினை மேரி கோம் எதிர்கொண்டார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் 36 வயதான மேரி கோம், 9-1 என்ற புள்ளிக் கணக்கில் நிகாத் ஜரினை வீழ்த்தி, ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். முன்னதாக, ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான இந்திய அணியில் மேரி கோம் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.
ஆனால் நிகாத் ஜரின் தான் மேரி கோம் உடன் மோத வேண்டும் எனக் கோரி விளையாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதைத் தொடந்து, ஒலிம்பிக் தகுதிச்சுற்று செல்லும் வீரர்களுக்கான விதிகளில் மாற்றம் செய்து இப்போட்டிக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் வழக்கம்போல் தனது திறமையை வெளிப்படுத்தி நிகாத் ஜரினை எளிதாக வீழ்த்தினார். இப்போட்டி முடிந்த பின் மேரி கோம், நிகாத் ஜரினுக்கு கைகொடுக்காமல் சென்றுவிட்டார்.
மகளிர் 57 கிலோ பிரிவில் மற்றொரு போட்டியில் சாக்ஷி சவுத்திரி, சோனியா லாதரை வீழ்த்தி ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.