ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் 69 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதி போட்டியில், இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், ஜோர்டனைச் சேர்ந்த ஈஷாய் ஹூசைனுடன் மோதவிருந்தார்.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, விகாஸ் கிருஷ்ணனின் கண்ணுக்கு அருகே காயம் ஏற்பட்டது. இதனால், அவர் போட்டியிலிருந்து விலகியதால் ஈஷாய் ஹூசைன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதால், விகாஸ் கிருஷ்ணனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
அதேபோல், மகளிர் 60 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரசன்ஜித் கவுர் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் ஒ யினான் ஜீவுடன் தோல்வியடைந்தார். இதனால், சிம்ரசன்ஜித் கவுருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதேபோல, இந்தத் தொடரின் ஆடவர் 63 கிலோ எடைப்பிரிவுக்கான பிளே ஆஃப் சுற்றில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக், காமன்வெல்த் சாம்பியன் ஆஸ்திரேலியாவின் ஹாரிசன் கார்சிட்டுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் மனிஷ் கவுசிக் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றார்.
இதன்மூலம், குத்துச்சண்டை பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்ற ஒன்பதாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்தியா சார்பில் குத்துச்சண்டை பிரிவில் ஒரு ஒலிம்பிக் போட்டியில் அதிமானோர் பங்கேற்கவிருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக, 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தா சார்பில் எட்டு பேர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றிருந்தனர்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்றது குறித்து மனிஷ் கவுசிக் கூறுகையில், "ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது எனது கனவாகும். இப்போட்டியின்மூலம் அந்த கனவு நனவாகியுள்ளது. எனது பயிற்சியாளருக்கும், குடும்பத்தினருக்கும் நான் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்" என்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்ற வீரர்கள்: மேரி கோம் (மகளிர் 51 கி.கி), சிம்ரன்ஜித் கவுர் (மகளிர் 60 கி.கி), லவ்லினா (மகளிர் 69 கி.கி), பூஜா ராணி (மகளிர் 75 கி.கி), அமித் பங்கல் (ஆடவர் 51 கி.கி), மனிஷ் கவுசிக் (ஆடவர் 63 கி.கி), விகாஸ் கிருஷ்ணன் (ஆடவர் 69 கி.கி), ஆசிஷ் குமார் (ஆடவர் 75 கி.கி), சதீஷ் குமார் (ஆடவர் 91 கி.கி)
இதையும் படிங்க:இதுவரை 74 இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி!