சமர்கந்த்: நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன், உலக பிளிட்ஸ் பட்டத்தை வென்று மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். உஸ்பெகிஸ்தானின் சமர்கந்த் நகரில் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த டிசம்பர் 25 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதன் இறுதிப்போட்டி நேற்று (டிச.30) நடைபெற்ற நிலையில், மாக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். ரஷ்ய கிராண்ட் மாஸ்டர்களான டேனியல் டுபோவ் (15.5 புள்ளிகள்) மற்றும் விளாடிஸ்லாவ் ஆர்டெமிவ் (15) ஆகியோரை விட, நார்வே செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்சன் 16 புள்ளிகளுடன் பட்டத்தை வென்றார். இது மாக்னஸ் கார்ல்சனுக்கு 17வது உலக சாம்பியன் பட்டமாகும். அதில் 5 கிளாசிக்கல் பட்டங்கள், 5 ரேபிட் மற்றும் 7 பிளிட்ஸ் பட்டங்கள் அடங்கும்.
ஒரு மோசமான தொடக்கத்தில் மீண்டு வந்த மாக்னஸ் கார்ல்சன், 21 சுற்றுகளில் மொத்தம் 16 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் முன்னிலை பெற்ற அவர், உலக பிளிட்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். இது குறித்து அவர் கூறியதாவது, "நான் நாள் முழுவதும் பதற்றத்தின் மூலம் ஓடுவதுபோல் உணர்ந்தேன். ஒவ்வொருவரும் இறுதி வரை போராடுகிறார்கள். ஆனால் யாரும் அவர்களது பெஸ்ட்டை கொடுக்கவில்லை. இது ஒரு நேரத்தில் ஆட்டத்தில் இருந்து தப்பி பிழைப்பது போன்றது. மேலும், எனது 17வது உலக சாம்பியன் பட்டத்தை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.