கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆறுமுறை ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்தின் லூயிஸ் ஹாமில்டன் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்ட ஹாமில்டன், சில நாள்களுக்கு முன் நான் நடிகை எல்பா (Elba), ஜஸ்டின் ட்ரூடோவின் (Justin Trudeau) மனைவி சோஃபி ஆகியோருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நான் கடந்த வாரம் அவர்களுடன் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இணைந்து புகைப்படங்களை எடுத்தும், நெருக்கமாகப் பழகியும் வந்ததன் காரணமாக, தற்போது தனிமைப்படுத்திக்கொள்ள முடிவுசெய்துள்ளேன் எனப் பதிவிட்டார்.
ஆறுமுறை எஃப்1 உலகச்சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன் இதனையடுத்து ஹாமில்டன் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கும் கோவிட்-19 கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகளில் எனக்கு கோவிட்-19 இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நான் பல முறை என்னுடைய மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெற்ற பிறகே தனிமைப்படுத்திக்கொள்ள முடிவுசெய்துள்ளேன். மேலும் மே 13ஆம் தேதிவரை யாரையும் சந்திக்கப் போவதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்கள் அனைவரும் பெருந்தொற்று உள்ளவர்களிடமிருந்து தள்ளி இருப்பது, தேவைப்பட்டால் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்வது, முடிந்தவரை 20 விநாடிகள் உங்களது கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினிகளைக் கொண்டு கைகழுவுவது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு ஹாமில்டன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:யுவென்டஸ் கால்பந்து கிளப் வீரர் பாலோ டைபாலாவுக்கு கோவிட்-19 உறுதி