இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்தியா சார்பாக விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தயான் சந்த் தான். ஏனெனில் தயான் சந்த் தலைமையிலான இந்திய அணி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தது. எனவே அவரை சிறப்பிக்கும் வகையில் அவரது பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
தேசிய விளையாட்டு தினத்தன்று வாழ்வில் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு குடியரசுத் தலைவரால் விருது வழங்கி கவுரவிக்கப்படும். கேல் ரத்னா, அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான் சந்த் விருது இவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்த விருது வழங்கும் விழா, இவ்வருடம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுகிறது.
கேல் ரத்னா:
நான்கு வருடங்களாக தொடர்ந்து விளையாட்டில் சிறப்பாக செயல்படும் விளையாட்டு வீரர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படும். இந்த விருதினைப் பெறுவோருக்கு பரிசுத்தொகையாக ஏழரை லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதினை தமிழ்நாடு வீரர் மாரியப்பன், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ஆகியோர் பெறுகின்றனர்.
அர்ஜுனா விருது:
சர்வதேசப் போட்டிகளில் நான்கு வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும். தலைமைப் பண்பு, ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப், விளையாட்டில் கடைபிடிக்கப்படும் ஒழுங்குமுறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விருதுகள் வழங்கப்படும். இந்த விருதினைப் பெறுவோருக்கு அர்ஜுனா சிலையுடன் பரிசுத்தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
துரோணாச்சார்யா விருது:
இந்த விருது, விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும். இந்தியாவுக்காக களமிறங்கும் வீரர்களை தயார் செய்யும் பயிற்சியாளர்களை கவுரவிக்கும் வகையில் இவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது பெறுவோருக்கு விருதுடன் சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.
தயான் சந்த் விருது: