கடினமான சவாலாக இருக்கும் மலையேற்றத்தை வெற்றிகரமாக முடித்து சாதனைப் படைப்பவர்கள் சிலரே. அந்த வகையில் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் உள்ள ஆண்டஸ் மலைகளில் அமைந்துள்ள அகோன்காகுவா சிகரத்தில் ஏறி இந்தியச் சிறுமி ஒருவர் உலக சாதனைப் படைத்துள்ளார்.
மும்பையில் உள்ள கப்பற்படை குழந்தைகள் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் காம்யா கார்த்திகேயன் என்ற சிறுமியே இந்த மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் லடாக்கில் உள்ள ஸ்டோக் காங்கிரி 2 சிகரத்தை எட்டினார். இது கடல் மட்டத்திலிருந்து 6 ஆயிரத்து 262 மீட்டர் (20,544 அடி) உயரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே காம்யா கார்த்திகேயன், தற்போது தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவில் உள்ள அகோன்காகுவா சிகரத்தை எட்டியதன் மூலம், அந்த சிகரத்தில் ஏறிய மிகக் குறைந்த வயது சிறுமி என்ற சாதனையைப் படைத்துள்ளார். கடல் மட்டத்திலிருந்து 6 ஆயிரத்து 962 மீட்டர் (22841.21 அடி) உயரத்தில் அமைந்துள்ள அகோன்காகுவா சிகரத்தின் உச்சியை அவர் எட்டினார்.
இளம் வயதிலிருந்தே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டிருந்த காம்யா, தனது மூன்றாவது வயதிலிருந்தே தன்னுடைய சாதனைக்கான அடித்தளத்தை போட ஆரம்பித்துவிட்டார். புனேவில் உள்ள லோனோவாலாவில் மலையேறும் வழக்கத்தை தொடங்கிய அவர், தனது பெற்றோர்களின் உதவியோடு பல மலைகளின் சிகரத்தையும் எட்டியுள்ளார்.
லடாக்கில் உள்ள ஸ்டோக் காங்கிரி (6,153மீட்டர்) சிகரத்தின் உச்சியில் ஏறிய இவர் மிகக் குறைந்த வயதில் அந்த சிகரத்தை அடைந்த நபர் என்ற சாதனையைப் படைத்தார். அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ, ஐரோப்பாவில் உள்ள எல்ப்ரஸ், ஆஸ்திரேலியாவில் உள்ள கொசியோஸ்கோ உள்ளிட்ட உயரிய சிகரங்களையும் காம்யா ஏறியுள்ளார்.
காம்யா மலையேற்றத்துக்குத் தேவையான அடிப்படை பயிற்சிகளை தனது தந்தையும் கப்பற்படை கமாண்டருமான கார்த்திகேயனிடம் பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக அவர் எடுத்துக்கொண்ட கடினமான பயிற்சியே தற்போது இந்த சாதனையைப் படைக்க காம்யாவிற்கு உதவியதாக கப்பற்படை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் ரசிகர்கள் முன் மீண்டும் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர்!