கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், வேறு மாநிலங்களில் பணிபுரிந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
அவர்களில் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து, வேறு வழியின்றி சொந்த ஊருக்கு நடைபயணமாகச் செல்லத் தொடங்கினர். இன்னும் சிலர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர்.
அந்த வகையில், சிறுமி ஒருவர் தனது தந்தையை பின் இருக்கையில் அமரவைத்து 1200 கிலோமீட்டர் சைக்கிளில் கடந்துள்ளார்.
சைக்கிள் பயணம்
பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தின் சிர்ஹூலி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். இவருக்கு ஜோதி குமாரி என்ற 13 வயது மகள் உள்ளார்.
பிழைப்புக்காக ஹரியானா மாநிலத்திற்குச் சென்று ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்துவந்த பாஸ்வான், கடந்த ஜனவரி மாதம் விபத்துக்குள்ளானார். அதனால் அவர் நடக்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனிடையே மத்திய அரசு கரோனா தீநுண்மி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது.
இதையடுத்து தனது தந்தையை சைக்கிளின் பின்புறம் அமரவைத்து ஜோதி, ஹரியானா மாநிலத்திலிருந்து பிகார் மாநிலம் வரை சுமார் 1,200 கிலோமீட்டர் தூரத்தை ஏழு நாள்களிள் கடந்து சாதித்துள்ளார்.
அச்சிறுமியின் தன்னம்பிக்கைக்கும், மன உறுதிக்கும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில், இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு சார்பாக அச்சிறுமிக்கு பயிற்சிக்கான வாய்ப்பு வழங்கவுள்ளதாகக் கூறி அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சி.எஃப்.ஐ. தலைவர் ஓங்கார் சிங் கூறுகையில், "ஜோதி குமாரியின் திறனைக் கண்டு சி.எஃப்.ஐ. உறுப்பினர்களிடையே கலந்தாலோசித்தோம். அதில் அச்சிறுமிக்குத் தேவையான பயிற்சிகளை வழங்க சி.எஃப்.ஐ. உறுப்பினர்கள் அனுமதியளித்தனர்.
ஏழு நாளில் 1,200 கி.மீ தூரத்தை சைக்கிளில் கடந்த சிறுமி இதைத்தொடர்ந்து, ஜோதி குமாரியின் பயிற்சிக்கான அழைப்பை நாங்கள் விடுத்துள்ளோம். மேலும், இதற்கான அனைத்து செலவையும் சி.எஃப்.ஐ. ஏற்றுக்கொள்ள முடிவுசெய்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இது மோடி ஆட்சி... காஷ்மீர் விவகாரத்தில் அஃப்ரிடியை விளாசிய உ.பி அமைச்சர்!