கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பொதுமக்கள் பாதிப்படைந்துவருகின்றனர். இந்த வைரசை எதிர்கொள்ள உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமே ஒரே வழி என மருத்துவர்கள் கூறிவரும் நிலையில், உலகம் முழுவதும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பிரபலங்கள் மக்களுக்கு எடுத்துரைத்துவருகின்றனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ’Healthy Together’ என்ற விழிப்புணர்வு பரப்புரையை உலகச் சுகாதார அமைப்பு, ஐநா ஆகியவற்றோடு இணைந்து சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மேற்கொள்ளவுள்ளது.
இதில் மக்கள் தங்களது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எந்த மாதிரியான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஒலிம்பிக் வீரர்கள் கூறவுள்ளனர். இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் தாமஸ் பேச் பேசுகையில், ''விளையாடுவதால் பல மக்களின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக நாம் விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி அறிந்துவருகிறோம். உடல் ஆரோக்கியத்தில் விளையாட்டின் பங்கு அளப்பரியது'' என்றார்.
இதனைத் தொடர்ந்து ஐநா பொதுச்செயலாளர் டெட்ரோஸ் அதனோம் பேசுகையில், ''சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து மக்களின் ஆரோக்கியம் பற்றி பரப்புரையை மேற்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக ஒலிம்பிக் வீரர்கள் பல ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பை அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். அதனால் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க:டூப் சச்சினுக்கு கரோனா!