தடகளப் போட்டி என்றாலே ஜமைக்கா நாட்டின் ஜாம்பவான் வீரர் உசைன் போல்ட்டின் பெயர்தான் அனைவரின் நினைவுக்கும் வரும். ஓட்டப் பந்தயப் பிரிவில் தனது சிறப்பான ஆட்டத்தால் பல தடகள வீரர்களுக்கு அவர் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்கிறார். அவரது தாக்கம் தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லை. ஆம், மத்தியப் பிரேதசத்தின் சிவ்பூரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்வர் இந்தியாவின் உசைன் போல்ட்டாக விளங்குகிறார்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், வெறும் கால்களில் 100 மீட்டரை 11 நொடிகளில் புயல்போல் இலக்கை கடந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, வெறும் கால்களுடன் ஓடும் இவருக்கு யாரேனும் உதவி செய்தால் இவர் நிச்சயம் பெரிய வீரராக வளர்ச்சி அடைவார் என பலரும் சமூகவலைதளங்கள் வாயிலாக இவருக்கு குரல்கொடுக்க, அது அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானின் காதுக்கு எட்டியுள்ளது.
அவர் தனது ட்விட்டரில், 'இவரைப் போன்ற திறமையான வீரர்களால் இந்தியா ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய திறமையுள்ள இவர்களுக்கு சரியான நேரத்தில் வாய்ப்பும், சரியான தளத்தையும் வழங்கினால் அவர்கள் நிச்சயம் வரலாறு படைப்பார்கள். விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரேண் ரிஜிஜூ இவரது திறமையை மேம்படுத்த உதவி செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என பதிவிட்டிருந்தார். இதற்கு, கிரேண் ரிஜிஜூ, 'அவரை யாராவது என்னிடம் அழைத்துவாருங்கள். அவரை தடகள அகாடெமியில் சேர்த்து வைக்கிறேன்' என நம்பிக்கையுடன் பதிலளித்தார்.
100 மீட்டர் பிரிவில் உசைன் போல்ட் 9.58 நொடிகளில் இலக்கை கடந்ததுதான் சாதனையாக இருக்கிறது. இந்திய வீரர் அமியா குமார் மாலிக் 10.26 நொடியில் 100 மீட்டர் கடந்ததுதான் தேசிய அளவிலான சாதனையாகும். இப்படி இருக்கையில், வெறும் கால்களுடன் 100 மீட்டரை 11 நொடிகளில் கடந்த ரமேஷ்வருக்கு சிறப்பான வாய்ப்பும், உதவியும் வழங்கினால் நிச்சயம் இந்தியாவுக்கு பல சாதனைகளை தேடித்தருவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.