இந்தாண்டிற்கான மகளிர் உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சுவிச்சர்லாந்து நாட்டிலுள்ள லாசன்னே நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நட்சத்திர சதுரங்க வீராங்கனை ஹம்பி கொனேரு பங்கேற்றார்.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய ஹம்பி, அடுத்தடுத்த சுற்றுகளில் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதனிடையே இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் சீனாவின் லீ யிங்ஜியை ஹம்பி எதிர்கொண்டார்.
இப்போட்டியில் இருவரும் சிறப்பாக விளையாடியதால் ஆட்டம் 'டை பிரேக்கர்' சுற்று வரை சென்றது. டை பிரேக்கரில் சிறப்பாக செயல்பட்ட ஹம்பி, மகளிர் உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இத்தொடரின் மூன்றாவது நாளில்தான் எனது முதல் ஆட்டத்தை விளையாடினேன். ஆனால் நான் இந்த தொடரின் சாம்பியன் பட்டம் வெல்வேன் என கற்பனைக்கூட செய்து பார்க்கவில்லை. ஏனெனில் தொடரின் ஆரம்பம் முதலே முதல் மூன்று இடங்களுக்குள் வரவேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. ஆனால் தற்போது சாம்பியன் பட்டத்தை வென்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது" என்றார்.
இதையும் படிங்க:' இன்னொரு தோனி கிடைப்பது கடினம் ' - கங்குலி