தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 'இந்தியா' முதலிடம்: உலக அரங்கில் சாதிக்கப்போவது எப்போது? - India won more medals at South Asian Games 2019

காத்மாண்டு: நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா மகத்தான வெற்றிகளைக் குவித்த அதிக பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளது.

13th South Asian Sports
இந்தியா

By

Published : Dec 14, 2019, 5:05 PM IST

Updated : Dec 17, 2019, 9:51 PM IST

நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய ஒலிம்பிக் போட்டியில் உள்ள அனைத்துவிதமான போட்டிகளிலும் இந்திய வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கப் பட்டியலிலும் முதலிடம் பிடித்தனர். நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளும் அதிக பதக்கங்களை கைப்பற்றினாலும், இந்திய அணி வீரர்கள் அனைத்து வகையான போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் வங்கதேசமும் நூறுக்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்த நிலையில், பாகிஸ்தான், மாலத்தீவுகள், பூடான் ஆகியவை பதக்கப் பட்டியலில் பின்தங்கிவிட்டன.

இந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், 319 தங்கப்பதக்கங்கள் உள்பட மொத்தம் 1,119 பதக்கங்களை வெல்வதற்கு ஏழு நாடுகளைச் சேர்ந்த 2,700 வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆரம்பம் முதல் இந்திய வீரர்களே அனைத்து போட்டிகளிலும் முத்திரை பதித்தனர்.

மூன்றரை வருடங்களுக்கு முன்பு நடந்த 12ஆவது தெற்காசிய விளையாட்டில் துப்பாக்கிச் சுடுதல், குத்துச்சண்டை, ஜுடோ, டேக்வாண்டோ, கபடி உள்ளிட்ட போட்டிகளில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. அதேபோல், தற்போதும் நீச்சல், மல்யுத்தம், பளு தூக்குதல், உசு, குத்துச்சண்டை போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்று திறமையை வெளிப்படுத்திள்ளது இந்தியா. வில்வித்தையில் வங்கதேசமும் ஈட்டி எறிதலில் பாகிஸ்தானும் நடை மற்றும் தடகள ஓட்டப் பந்தயங்களில் இலங்கையும் எனத் தனிதனியாக சாதித்த நிலையில், இந்திய அணி அனைத்துப் போட்டிகளிலுமே தனக்கென்று தனி இடத்தை பிடித்தது.

13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி புள்ளிகள் அட்டவணை

35 ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கிய காலம் முதலே இந்தியாவின் ஆதிக்கம்தான் தொடர்கிறது. 9 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போட்டியில் 99 தங்கங்கள் உள்பட 188 பதக்கங்கள் வென்ற இந்தியா, 3 வருடங்களுக்கு முன்பு கவுகாத்தி, ஷில்லாங்கில் நடந்த போட்டியில் 300-க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்து பிரகாசித்தது. ஆனால் தற்போது ஏழு நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், அனைத்து நாடுகளும் கடும் சவால் விட்டதால் இந்தியா பெரிதாக சாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

7 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய போட்டியில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா, 40 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த 70 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்த தவறுவது பல காலமாக வழக்கமாகிவிட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் ஒரு வருடம் முன்பு ஜகார்தாவில் நடைபெற்ற போட்டியிலும் 8ஆவது இடத்துக்கு மேல் இந்திய அணியால் முன்னேற முடியவில்லை. காமன்வெல்த் நாடுகளிலேயே மிகப்பெரிய நாடாக இருந்தாலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, ஸ்காட்லாந்து போன்ற சிறிய நாடுகள் அளவுக்குக்கூட இந்தியாவால் சோபிக்க முடியவில்லை.

தெற்காசிய விளையாட்டுப் போட்டி

2017ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில், இந்தியா நன்கு திறமையை வெளிப்படுத்தியது. ஆனால் அடுத்து லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சீனா, கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வீரர்களுக்கு போதிய பயிற்சி கொடுத்து நன்கு தயார்படுத்தியிருந்த நிலையில், அதுபோன்று நமது வீரர்களை தயார் செய்யப்படாததால் இந்தியாவால் சாதிக்க முடியவில்லை.

அதேவேளை, உலக வரைபடத்தில் ஊசிமுனை போல் இடம் பெற்றுள்ள சின்னஞ்சிறு நாடுகளான புருண்டி, சுரிநாம் போன்ற நாடுகளைவிட, ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டில் பல காலமாகவே இந்தியாவின் செயல்பாடு மிகவும் மோசம்தான். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்கில் 50 வீரர்கள் பங்கேற்ற நிலையில், டென்னிசில் லியாண்டர் பயசால் கிடைத்த ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை மட்டுமே இந்தியாவால் பெற முடிந்தது.

அதன்பின் 20 ஆண்டுகள் கழித்து லண்டனில் நடந்த ஒலிம்பிக்கிற்கு 117 பேர் கொண்ட வீரர்களை அனுப்பிய இந்தியாவால் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் மட்டுமே பெற முடிந்தது. இதுவரை நடந்த 31 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பெற்ற மொத்த பதக்கங்கள் 26 மட்டுமே. ஆனால் இந்திய மக்கள் தொகையில் கால்வாசி மக்கள் தொகை மட்டுமே கொண்டுள்ள அமெரிக்கா, 2,400 பதக்கங்களுக்கு மேல் வென்றுள்ளது.

இந்நிலையில், அடுத்தாண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் 15 முதல் 20 பதக்கங்களை வெல்வோம் என இந்திய ஒலிம்பிக் சங்கமும் இந்திய விளையாட்டு ஆணையமும் கூறிவருகிறது. இந்த ஒலிம்பிக்கில், ஊக்க மருந்து சர்ச்சையால் ரஷ்யா பங்கேற்க சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு தடைவிதித்துள்ளதும் இதற்கு ஒரு காரணம்.

"வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக்கில் இரு இலக்கங்களில் பதக்கங்கள் வெல்வதுடன், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா முன்னேறும்" என மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் கர்ணம் மல்லேஸ்வரி

இப்படி பெயரளவுக்கு அறிக்கைகள் மூலம் தம்பட்டம் அடித்தால் மட்டும் போதுமானதாக இருக்காது. இந்திய அணி ஒலிம்பிக்கில் சிறப்பாகச் செயல்பட அதற்குரிய திட்டங்களையும் முன்னேற்பாடுகளையும் வகுக்க வேண்டியதும், அதனை நடைமுறைப்படுத்துவதும் முக்கியமான கடமையாகும். இயற்கையாகவே மனித ஆற்றல்மிக்க மற்றும் பல்வேறு திறமைகள் படைத்தவர்கள் என்ற பெருமை படைத்தது நம் நாடு. எனவே திறமை படைத்தவர்களைக் கண்டறிந்து, அவர்களை மெருகேற்றி, முறையான பயிற்சி வழங்கினால் மட்டுமே பிரகாசிக்க முடியும் என்பது நிதர்சனம்.

ஆனால் நம் நாட்டிலோ தற்போது திறமை படைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதிலும், ஊக்கப்படுத்துவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகளும் குறைகளுமே நிலவுகின்றன. சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்க வேட்டையில் இந்தியா பின்தங்கியே இருப்பதற்கு இதுதான் முக்கியக் காரணம். அதுபோல், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளிலும், கல்வி நிறுவனங்களிலும், போதிய உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்காததும், பொது விளையாட்டு மைதானங்களை உருவாக்காததும், விளையாட்டில் இந்தியா இன்னும் வளர்ச்சியை எட்ட முடியாததுக்கு காரணம் என்பதும் உண்மை.

எனவே, விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களைப் பள்ளிப் பருவத்திலேயே கண்டறிந்து, அத்துறையில் சிறப்பான பயிற்சிகள் வழங்கி, அவர்களால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்க்க ஊக்கமளிக்க வேண்டும். பள்ளிகளிலேயே இதனைத் தொடங்கி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் இடையே நம்பிக்கையூட்டும்பட்சத்தில் சிறந்த எதிர்காலம் உண்டு என்பதையும் நிரூபிக்கலாம்.

இவை சாத்தியப்படும்பட்சத்தில், எல்லாவித விளையாட்டுகளிலும் வெல்ல முடியும் என்ற திடமான நம்பிக்கையுடன், வெற்றிகள் பல குவித்து இந்தியக் கொடியை உலக அரங்கில் பட்டொலி வீசி பறக்கவிடலாம்.

இதையும் படிங்க: சென்னை தாஜ் ஹோட்டல் ஊழியரைச் சந்திக்க விரும்பும் லிட்டில் மாஸ்டர்!

Last Updated : Dec 17, 2019, 9:51 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details