ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறவுள்ளது. இதில், டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் போர்ச்சுகல் நாட்டின் கோண்டோமோர் நகரில் நடைபெற்றுவருகிறது. இதன் காலிறுதிச் சுற்றில் முன்னேறும் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெறும்.
இந்த நிலையில், இந்தத் தகுதிச் சுற்றில் ஆடவர் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் சரத் கமல், சத்யன், ஹர்மீத் தேசாய் அடங்கிய இந்திய அணி, லக்ஸம்பர்க் அணியை எதிர்கொண்டது. இதில், இரட்டையர் பிரிவில் சரத் கமல், ஹர்மீத் தேசாய் அடங்கிய இந்திய அணி 11-9, 16-14, 11-6 என்ற நேர் செட் கணக்கில் லக்ஸம்பர்க்கின் ஜைல்ஸ் மிச்லி - எரிக் கிளோட் இணையை வீழ்த்தி முதல் புள்ளியைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து, ஆடவர் ஒற்றையர் பிரிவில் லுகா மடோனோவிக்கிடம் முதல் இரண்டு செட்களில் தோல்வியடைந்த இந்தியாவின் சத்யன் அதன் பின் 11-3, 13-11, 11-6 என்ற கணக்கில் அடுத்த மூன்று செட்டை கைப்பற்றி வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து மற்றொரு ஒற்றையர் பிரிவில் சரத் கமல் 11-3, 11-3, 12-14, 11-5, என்ற செட் கணக்கில் எரிக் கிளோட்டை வீழ்த்தினார்.