தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான 13ஆவது விளையாட்டுத் தொடர் தற்போது நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணி அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, பதக்கங்களை அள்ளி வருகிறது.
அந்த வரிசையில் இன்று நடைபெற்ற ஆடவர் கபடி இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் வலிமை மிகுந்த இந்திய அணி 51 -18 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணியை வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற மகளிர் கபடி இறுதிப்போட்டியில் இந்திய அணி, தொடரை நடத்தும் நேபாளம் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய மகளிர் அணி ஆட்டநேர முடிவில் 50 - 13 என்ற புள்ளிகளின் அடிப்படையில் நேபாளத்தை வீழ்த்தி, மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றது.
இதன் மூலம் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி 134 தங்கம், 83 வெள்ளி, 43 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 264 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: பீட்டாவின் விளம்பரப் படத்திற்கு ஒப்பந்தமான விளையாட்டு வீராங்கனை!