யோசு :கொரிய ஒபன் பேட்மிண்டன் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சாத்விசாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்றது.
கொரிய ஒபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் இரண்டு முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவைச் சேர்ந்த பஜர் அல்பியான், முகமது ரியான் அர்டியன்டோ இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்க செட்டை இந்திய ஜோடி 17-க்கும் 21 என்ற கணக்கில் இழந்தது.
அடுத்த செட்டை கைப்பற்றும் நோக்கில் வீறுநடை போடத் தொடங்கிய இந்த இணை ஸ்மாஷ் ஷாட்டுகளை அடித்து இந்தோனேசியா ஜோடியை கலங்கடிக்கச் செய்தது. விறுவிறுப்பாக நடத்த ஆட்டத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை 21-க்கு 13, 21-க்கு 14 என்ற கணக்கில் இந்தியாவின் சாத்விசாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை வென்றது.
நடப்பு ஆண்டில் நான்காவது தொடரை சாத்விசாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை கைப்பற்றி உள்ளது. முன்னதாக சுவிஸ் ஓபன், ஆசிய சாம்பியன்ஷிப், இந்தோனேசிய ஒபன் ஆகிய மூன்று போட்டி தொடர்களை இந்திய இணை கைப்பற்றி இருந்தது. தற்போது கொரிய ஒபனை வென்றதையும் சேர்த்து நடப்பாண்டில் சாத்விசாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை வென்ற 4வது சாம்பியன்ஷிப் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலக பேட்மிண்டன் இரட்டையர் தரவரிசையில் சாத்விசாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை 3வது இடத்தில் உள்ளது .
இதையும் படிங்க :IND VS WI: 3வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 229/5