நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்ததாக ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.
இதில் குத்துசசண்டையில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆடவர் 63 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஷிவ தாப்பா, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் அவர் கஜகஸ்தான் வீரர் சனாதாலி டோல்டாயேவை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்கும் அவர் தகுதிபெற்றார்.
ஷிவ தாப்பா உலக குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார். அதுமட்டுமல்லாது அவர் தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் நடப்புச் சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்திலின் பார்க்கரை வீழ்த்தி தங்கம் வென்றார். பூஜா ராணி இந்தாண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் 69 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற மற்றொரு இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரரிடம் தோற்றதால் இந்திய வீரர் ஆஷிஷ் வெள்ளி வென்றார். முன்னதாக நிகாத் ஜரின் (51 கிலோ), சிம்ரன்ஜீத் கவுர் (60 கிலோ), சுமித் சங்வான் (91 கிலோ), வாஹ்லிம்புயா (75 கிலோ) ஆகியோர் அரையிறுதிப்போட்டியில் தோல்வியுற்றதால் வெண்கலம் வென்றனர்.