ஹாங்சோ :ஆசிய விளையாட்டு மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா வெண்கலப் பதக்கம் வென்றார்.
19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவு குத்துச் சண்டை அரை இறுதிப் போட்டியில், சீன தைபே வீராங்கனை லின் யு டிங்கை, இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பர்வீன் ஹூடா 5-க்கு 0 என்ற கணக்கில் சீன தைபே வீராங்கனையிடம் தோல்வியை தழுவி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடாவுக்கும், சீன தைபே வீராங்கனை லின் யு டிங்கிற்கும் உயர வித்தியாசம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக பர்வீன் ஹூடாவால் சரமாரியான குத்துகளை விட்டு புள்ளிகளை சேர்க்க முடியாமல் போனது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா வெண்கலப் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ள 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பர்வீன் ஹூடா ஏற்கனவே தகுதி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆசிய விளையாட்டில் வெண்கல பதக்கத்துடன் வெளியேறும் நான்காவது இந்திய குத்துசண்டை போட்டியாளர் பர்வீன் ஹூடா என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நிகாத் ஜரீன் 50 கிலோ எடை பிரிவிலும், பிரீத்தி பவர் 54 கிலோ எடைப் பிரிவிலும், நரேந்தர் பெர்வல் 92 கிலோ எடைப் பிரிவிலும், அரையிறுதியில் தோல்வியை சந்தித்து வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
75 கிலோ எடைப் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் லவ்லினா போர்கோஹன், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சீன வீராங்கனை லி கியானை எதிர்கொள்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு தொடருக்கு பின் இந்திய அணி அதிகபட்ச பதக்கங்களை நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :Asian Games Archery: ஆசிய வில்வித்தையில் இந்திய ஜோடி அசத்தல்! தங்கம் வென்று சாதனை!