மாற்றுத்திறன் படைத்த தடகள வீரர்களுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயின் நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் மூன்று பேர் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
ஆடவர் எஃப்46 பிரிவில் நடைபெற்ற போட்டியில் 2017ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்ற நட்சத்திர இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் கலந்துகொண்டார். முதல் ஐந்து முயற்சிகளில் இரண்டாவது இடத்தில் பின்தங்கியிருந்த சுந்தர், பின்னர் ஆறாவது முறையாக 61.22 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
அவருக்கு அடுத்தபடியாக முறையே இரண்டு, மூன்றாம் இடம் பிடித்த இலங்கை வீரர் தினேஷ் பி. ஹெராத் முடியான்சேலக (60.59 மீ) வெள்ளியும் இந்திய வீரர் அர்ஜித் சிங் (59.46 மீ) வெண்கலமும் வென்றனர். இதே பிரிவில் ரின்கு ரின்கு என்ற இந்திய வீரர் நான்காம் இடம்பிடித்தார்.
இதன்மூலம் இந்திய வீரர்கள் சுந்தர் சிங் குர்ஜார், அர்ஜித் சிங், ரின்கு ரின்கு ஆகியோர் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றனர்.
சுந்தர் சிங் குர்ஜார், உலக பாரா தடகள சாம்பியன் பட்டத்தைக் தக்கவைத்ததோடு, இந்தத் தொடரில் இரண்டு பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா, 2013 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கமும் 2015இல் வெள்ளியும் வென்று இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை அடைந்தார்.