கத்தார் தலைநகர் தோஹாவில் 14ஆவது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் நாளில் பல்வேறு பிரிவுகளிலும் இந்திய அணி ஐந்து பதக்கங்களை வென்றது. இதனிடையே இரண்டாது நாளான நேற்று ஆடவர் டிராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் கிய்னான், மான்வ்ஜித், பிரித்விராஜ் ஆகியோர் அடங்கிய அணி 357 புள்ளிகளுடன் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளி வென்றது.
இந்தப் போட்டியில் இந்திய வீரர் கிய்னான் செனாய் இரண்டாம் இடம்பிடித்தாலும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார். அதேபோன்று ஆடவர் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா 11ஆவது இடம்பிடித்ததால் ஒலிம்பிக் வாய்ப்பை இழக்க நேரிட்டது.
அதேவேளையில் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் அனிஷ், பாவேஷ் செகாவாத், ஆதர்ஷ் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1716 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றது. இதில் சீனா தங்கமும் கொரியா வெள்ளியும் வென்றன. இதே பிரிவில் இளையோருக்கான போட்டியிலும் ஆயுஷ் ஜிந்தால், ஆயுஷ் சங்வான், ஜப்தியேஷ் ஜாஸ்பால் அடங்கிய இந்திய வீரர்கள் வெண்கலம் வென்றனர்.