ஹைதராபாத்:16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அண்மையில் நடந்து முடிந்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. பரபரப்பான இறுதிப் போட்டியில் சென்னை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் பக்கம் கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.
ஐசிசியின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது. அதன் இறுதிப் போட்டி கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நுழைந்த இந்திய அணி, நியூசிலாந்திடம் கோப்பையை பறிகொடுத்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்த போட்டிகளின்படி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.
வரும் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதவுள்ளன. இந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆஸ்திரேலிய அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய வீரர் விராட் கோலி டஃப் கொடுப்பார் என ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த கேமரூன், "விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கிறார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவர் முக்கியமான வீரராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற பெரிய போட்டிகளில் விராட் கோலி எப்போதும் சிறப்பாக விளையாடுவார். இந்த இறுதிப் போட்டியிலும் தனது முழு திறமையையும் காண்பிப்பார். அதனால், நாங்கள் அவரை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். வழக்கமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அதிக டென்ஷனை ஏற்படுத்தும். அதனால், இப்போட்டியில் களமிறங்கும்போது சீரான மனநிலையுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: Dhoni surgery : டோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை... மருத்துவர்கள் அறிவுரை!