இந்திய பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் வீராங்கனை பாலக் கோலி. சிறுவயதிலேயே தனது ஒரு கையை இழந்த இவர், பேட்மிண்டன் விளையாட்டில் கொண்ட ஆர்வம் காரணமாக பயிற்சிபெறத் தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து தனது விடா முயற்சியுடன் பயிற்சி பெற்று வந்த பாலக் கோலி, இன்று (டிச.24) சர்வதேச பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்து சாதித்துள்ளார். இந்நிலையில் பாலக் கோலி ஈடிவி பாரத்துடனான நேர்காணலின்போது, இந்தியாவிற்காக பதக்கங்ளை வெல்ல தான் உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பாலக் கோலியுடனான நேர்காணல் பின்வருமாறு:
கேள்வி : ஊரடங்கின்போது உங்களுக்கு தற்காலிகமாக லக்னோவில் பயிற்சி முகாம் செயல்பட்டது. இப்போது உங்களுடைய பயிற்சி எப்படி இருக்கிறது?
பாலக் கோலி :ஆம். ஊரடங்கின்போது பயிற்சி பெறுவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஏனெனில் என்னுடைய பயிற்சியாளர், சக வீரர்கள் என யாருடனும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இருப்பினும் எனது பயிற்சியாளர் முன்கூட்டியே நிலையை அறிந்திருந்ததால், எங்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும், பயிற்சி பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்திருந்தார். தற்போது, லக்னோவின் எனது பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2017 முதல், நான் இங்கே பயிற்சி பெற்று வருகிறேன்.
கேள்வி: விளையாட்டு அமைச்சரிடம் கோரிக்கையை வைத்த பிறகும், உங்களை டாப்ஸில் (TOPS) சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஏன் உங்கள் மீது ஏதேனும் புகார்கள் உள்ளதா?
பாலக் கோலி : என்மீது புகார்கள் ஏதும் இல்லை. ஒலிம்பிக் ஆண்டில் நான் சர்வதேச பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் 5ஆம் இடத்தைப் பிடித்து விட்டேன். எனவே நான் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அதற்குள்ளாகவே கரோனா காரணமாக விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால், சூழ்நிலைகள் மற்றும் நிபந்தனைகள் காரணமாக டாப்ஸில் எனது பெயரை சேர்க்க சற்று தாமதமானது.
கேள்வி : நீங்கள் பயிற்சி பெறும் முறை பற்றி கூறுங்கள்?
பாலக் கோலி : 2021ஆம் ஆண்டின் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக அரசு எங்களுக்கு பெரும் ஆதரவை வழங்கி வருகிறது. அது எங்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் பயிற்சியாளர் கவுரவ் கண்ணா, எனது ஒட்டுமொத்த பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.