2020ஆம் ஆண்டுக்கான ஹங்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் புடாபேஸ்ட் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் இரட்டையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த இந்திய இணை சத்யன் ஞானசேகரன், சரத் கமல் தங்களது சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தனர்.
நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்த இணை, உலகின் முதல் நிலையான ஹாங்காங்கின் வான் கிட் ஹோ - சூன் டிங் வாங் இணையை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சத்யன் - சரத் கமல் இணை 11-7, 12-10, 4-11, 4-11, 11-9 என்ற செட் கணக்கில் திரில் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
இதைத்தொடர்ந்து, இன்று இரவு நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் சத்யன் - சரத் கமல் இணை ஜெர்மனியின் துடா பெனிடிக் - ஃபிரான்சிஸ்கா பாட்ரிக் (Duda Benedikt - Franziska Patrick) இணையுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதற்கு முன்னதாக, நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை மணிக்கா பத்ரா 9-11, 4-11, 7-11, 12-10, 11-9, 11-7, 14-12 என்ற செட் கணக்கில் 26ஆம் நிலை வீராங்கனை தைவான் நாட்டைச் சேர்ந்த சென் ஸூ யூவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து, நடைபெற்ற போட்டியில் அவர் 9-11, 1-11, 7-11, 7-11 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மியூ ஹிரானோவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இதையும் படிங்க:டி20- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் ஹாட்ரிக் சாதனை