ஜகார்டா:11ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் நேற்று முன்தினம் (மே 23) தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகளும், இரண்டாம் பிரிவில் மலேசியா, தென் கொரியா, வங்கதேசம், ஓமன் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு எதிரான போட்டி நேற்று (மே 24) நடைபெற்றது. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜப்பான் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இருப்பினும், முதல் 20 நிமிடங்களில் (First Quarter) எந்த கோலும் பதிவாகாத நிலையில், இரண்டாவது குவாட்டரில் (Second Quarter) ஜப்பான் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
தொடர்ந்து, ஜப்பான் மற்றொரு கோல் அடிக்க, இந்தியாவின் ராஜ்பார் பவன் 44ஆவது கோல் அடித்து அசத்தினார். இதனால், மூன்றாவது குவார்டரில் (Third Quarter) 2-1 என்ற கணக்கில் ஜப்பான் முன்னிலை வகித்தது.
இதையடுத்து, நான்காவது குவார்டரில் (Fourth Quarter) ஜப்பானும், இந்தியாவும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இரண்டாவது கோலையும் ராஜ்பார் தான் பதிவு செய்தார். ஆனால், கடைசி 7 நிமிடங்கள் இருந்தபோது, ராஜ்பாருக்கு பச்சை அட்டை கொடுக்கப்பட்டது. இதனால், அவர் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு 10 பேர் மட்டுமே ஆடினர்.