தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விவசாய பூமியில் விளைந்த இந்தியாவின் தங்க மங்கை ஹிமா தாஸ்! - அஸாம்

மீண்டும் பின்னணியில் ஒரு குரல். 'keep an very close eye on hima das' முதல் 300 மீட்டர்களை ஆஸ்திரேலிய வீராங்கனை முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறார். வெற்றிக்கு 100 மீட்டர் இருக்கையில் மீண்டும் ஹிமா தாஸ் என்னும் பெயர் உச்சரிக்கப்படுகிறது. 'here comes a hima das. the indians is searching... she concede a line... she can see history. india has never won a medal in a track event. But das had done it here.. brilliant' என முடிவடைகிறது.

தாஸ்

By

Published : Jul 22, 2019, 7:39 PM IST

Updated : Jul 23, 2019, 8:42 AM IST

ஜூலை 12, 2018ஆம் ஆண்டு, ஃபின்லாந்தில் 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுகிறது. 400மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மகளிர் பிரிவுக்கான போட்டிகள் நடைபெறுகிறது. அப்போது பின்னணியில் ஒரு குரல், வில்லியம்ஸ் இன் ஒன்... வாண்டி இன் டூ... மிக்லொசின் இன் த்ரீ.. தாஸ் இன் ஃபோர்.. அப்படியே தொடர்ந்து எட்டு பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றன. ஓட்டத்தைத் தொடங்குவதற்கு வீராங்கனைகள் தயாராகிறார்கள். துப்பாக்கி சுடப்படுகிறது. பாய்ந்து செல்லும் புல்லட்டிற்கு இணையான வேகத்தில் வீராங்கனைகள் பாய்கிறார்கள்.

மீண்டும் பின்னணியில் ஒரு குரல். 'keep an very close eye on hima das' முதல் 300 மீட்டர்களை ஆஸ்திரேலிய வீராங்கனை முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறார். வெற்றிக்கு 100 மீட்டர்கள் இருக்கையில் மீண்டும் ஹிமா தாஸ் என்னும் பெயர் உச்சரிக்கபப்டுகிறது. 'here comes a hima das. the indians is searching... she concede a line... she can see history. india has never won a medal in a track event. But das had done it here.. brilliant' என முடிவடைகிறது. சர்வதேச அளவிலான தொடர்களில் இந்தியர் ஒருவர் பெறும் முதல் தங்கப் பதக்கத்தை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி மகள் ஹிமா தாஸ் பெறுகிறார்.

18 வயதினருக்கான சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுத் தந்தபோது அவருடைய வயது 18 மட்டுமே. இயற்கை எழில், அழகு நிறைந்து காட்சியளிக்கும் அசாம் மாநிலத்தில் விவசாயம் செய்து வசித்து வரும் ரஞ்சித் - ஜொனாலி தாஸ் ஆகியோருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தவர் தான் ஹிமா தாஸ். பள்ளி நாட்களின் போது கால்பந்து விளையாட்டில் இந்தியாவுக்காக ஆட வேண்டும் என கனவுடன் இருந்தார் ஹிமா. ஆனால் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் ஹிமா தாஸ் ஆடிய விதத்தைப் பார்த்த பயிற்சியாளர், தடகளத்திற்கு பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தியதையடுத்து, 2016ஆம் ஆண்டு முதல் தடகள ஓட்டத்தில் பயிற்சி செய்கிறார்.

ஹிமா தாஸ்

அந்த பயிற்சிகள் புல்தரைகளிலும், மைதானங்களிலும் மேற்கொள்ளப்படவில்லை. விவசாய நிலத்திலும், சாலைகளிலும் வெறுங்காலுடன் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைப் பார்த்த ஹிமா தாஸின் பயிற்சியாளர் ஷம்ஹுல், அவருடைய பெற்றோரைச் சந்திக்கிறார். அப்போது பையனைப் போல் எப்போதும் விளையாடும் ஹிமா என்ன தவறு செய்தளோ என எண்ணி பயந்து கொண்டே வந்த அவர்களுக்கு, 'ஹிமா தாஸ் சிறந்த ஒட்டப்பந்தய வீராங்கனையாக வருவார். ஹிமாவை நாகன் மைதானத்தில் எனக்கு தெரிந்த பயிற்சியாளரிடம் பயிற்சிக்கு அனுப்பி வையுங்கள்' எனக் கூறினார். இதனைக் கேட்ட ஹிமாவின் தந்தை ரஞ்சித், 'ஏழ்மையால் தான் எனது கனவினை துறந்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். என் மகளையும் அப்படி ஆக்க விரும்பவில்லை. அவளை பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறேன் சார்' எனக் கூறிவிட்டு ஹிமாவை நாகன் மைதானத்தில் இருக்கும் பயிற்சியாளரிடம் அனுப்பி வைக்கிறார். அவருக்கு அப்போது தெரிந்திருக்காது. தனது மகள் இந்தியாவுக்காக பல பதக்கங்களை பெற்று வானுயர பெருமை பெறப் போகிறாள் என...!

ஹிமா தாஸின் பெற்றோர்

அங்கிருந்து பங்கேற்ற சில போட்டிகளில் தோல்வியடைந்தாலும், ஸ்பைக் ஷூக்களை மிக சில நாட்களாக மட்டுமே பயன்படுத்திய ஹிமா ஒவ்வொரு போட்டியிலும் தனது ஓட்டத் திறனை முன்னேற்றிக் கொண்டே இருந்தார்.

அப்போது தான் அந்த நாள் வந்தது. சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ் வென்று பெருமை தேடித் தந்தார். வெற்றியைப் பகிர தனது தாயிடம் தொலைபேசியில் பேசியபோது, டிவியில் வருவாயா எனக் கேட்டுள்ளார். அதற்கு ஹிமா, உங்கள் மகள் இந்தியாவையே டிவியின் முன்னாள் உட்கார வைத்துவிட்டாள் என்றார்.

ஹிமா தாஸ்

அங்கே பதக்கங்கள் தொடங்கினாலும், ரசிகர்கள் மத்தியில் அதிர்ஷ்டம் என்கிற வார்த்தை உச்சரிக்கப்படுகிறது. ஏனென்றால் இதற்கு முன்னதாக வெற்றி பெற்ற வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பாக அடுத்தடுத்த போட்டிகளில் செயல்படாதது காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் ஹிமா தாஸ் அதற்கடுத்தப் போட்டியிலேயே இந்த விமர்சனத்தை அடித்து நொறுக்குகிறார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் பங்கேற்ற ஹிமா, 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் முதல் சுற்றுப் போட்டியை 51 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையைப் படைக்கிறார். அதன் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று திரும்புகிறார்.

ஹிமா தாஸ்

அதனையடுத்து பங்கேற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தவறான தொடக்கத்தின் காரணமாக இறுதிப் போட்டியில் நுழையும் வாய்ப்பு பறிபோகிறது. ஆனால் மனம் தளரவில்லை. அதனையடுத்து பாட்டியாலாவில் நடைபெற்ற ஃபெடரேசன் கோப்பை 400 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் கலந்து கொண்டு 52 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கத்தைத் தட்டிச் செல்ல, செய்தித்தாள்களில் ஹிமாவின் பெயர் நிரந்தரமாக இடம் பெறத் தொடங்கியது.

பின்னர் போலந்து பயணம் செய்கிறார். ஜுலை 2ஆம் தேதியிலிருந்து பதக்கங்களை வேட்டையாடத் தொடங்கிய ஹிமாவின் பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட 19 நாட்களில் ஐந்து தங்கப் பதக்கங்களை சர்வதேச வீராங்கனைகளை வீழ்த்தி வென்றிருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து முன்னேற்றமடைகிறார். முதல் போட்டியில் 200 மீட்டரை 23.65 வினாடிகளில் கடந்தால், நான்காவது போட்டியில் 23.25 வினாடிகளில் கடக்கிறார்.

ஹிமா தாஸ்

இந்த அசாத்திய வீராங்கனையை இந்திய பிரதமரிலிருந்து கடைக்கோடி மனிதர் வரை அனைவரும் வாழ்த்துகிறார்கள். 'திங் எக்ஸ்பிரஸ் இஸ் ஆன் தி வே' (dhing express is on the way) என உலகமே கொண்டாடுகிறது. நமது பேச்சை விட நமது செயலில் அதிக வீரியம் இருக்க வேண்டுமென ஹிமா கூறுவார். ஆம், அதிகம் பேசாத ஹிமா, செயலில் பேசிக் கொண்டிருக்கிறார். இந்திய தடகள சம்மேளனம் ஆங்கிலம் தெரியாது என பேசியதற்கு, தனது செயலால் பதில்களைக் கூறிக்கொண்டிருக்கிறார்

ஆனால் ஹிமா வெற்றி பெற்று விட்டு கூறிய வார்த்தைகள் என்னவென்றால், அசாம் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு உதவுங்கள் எனக்கூறி தனது ஊதியத்தில் பாதியைக் கொடுக்கிறார்.

ஹிமா தாஸ்

இந்த சமூக உணர்வு திடீரென வந்ததில்லை. அசாமில் கள்ளச் சாராயம் விற்ற நபர்களை தனது நண்பர்களுடன் சென்று அடித்து உதைத்ததிலிருந்தே தொடர்கிறது. இவரது முதல் வெற்றியைப் பார்த்துவிட்டு அவரது சகோதரி கூறிய வார்த்தைகள் இவை:

'நானும், எனது சகோதரியைப் போல் ஒட்டப்பந்தய வீராங்கனையாக வர வேண்டும் என ஆசை. ஆனால் இன்று இந்தியாவே சொல்கிறது. ஹிமாவை போல் நாங்களும் வர வேண்டும் என. தன் தலைமுறை வீராங்கனைகளை ஈர்த்த முதல் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ். பெண்களால் தடகளத்திலும் சாதிக்க முடியும் என மீண்டும் அனைத்து தரப்பினரிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்'.

ஹிமா தாஸ்

தற்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் ஹிமா தாஸ். . விரைவில் இந்தியாவிற்கு மில்கா சிங்கும், பி.டி. உஷாவும் ஆசைப்பட்டு மயிரிழையில் தவறவிட்ட ஒலிம்பிக் பதக்கத்தை வென்று வர வாழ்த்துகள் ஹிமா...!

Last Updated : Jul 23, 2019, 8:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details