இது குறித்து ஹிமா தாஸ் கூறியதாவது:
"ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்ற வெள்ளிப்பதக்கம், தங்கப்பதக்கமாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதால், அந்தப் பதக்கத்தை கரோனாவிலிருந்து நம்மை பாதுகாப்பதற்காக சுயநலமின்றி பணியாற்றி வரும் மருத்துவர்கள், கரோனா போராளிகளுக்கு அர்ப்பணிக்கிறேன். இவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு இந்தோனேஷியாவிலுள்ள ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4X100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் முகமுது அனாஸ், எம்ஆர் பூவம்மா, ஹீமா தாஸ், ஆரோக்யா ராஜிவ் ஆகியோர் இணைந்து வெள்ளிப்பதக்கம் வென்றனர். இதையடுத்து தற்போது இவர்கள் பெற்ற வெள்ளிப்பதக்கம், தங்கப்பதக்கமாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பக்ரைன் நாட்டைச் சேர்ந்த கெமி அடிகோயாவுக்கு ஊக்கமருந்து சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டு பந்தயத்தில் விளையாடியது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தடகள நம்பிக்கை அமைப்பு அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்ததுடன், அவருக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை பறித்துள்ளது. மேலும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இவர் வென்ற தங்க பதக்கமும் பறிக்கப்பட்டுள்ளது.
4x100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு தங்கப்பதக்கமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தைப் பிடித்த கஜகஸ்தான் அணிக்கு வெள்ளிப்பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நான்காவது இடத்திலிருந்த இந்திய வீராங்கனை அனு ராகவன், மூன்றாவது இடத்துக்கு முன்னேறி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்ரைன் வீராங்கனை கெமி அடிகோயா பெற்ற தங்கப்பதக்கம் பறிப்பு காரணமாக, அனு ராகவனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: விளையாட்டுப் பயிற்சிக்கு அனுமதி