சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 28) மதியம் 3 மணியளவில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
செஸ் போர்டின் விலை: இந்த தொடருக்காக 'ஃபோர் பாய்ண்ட்ஸ் பை ஷெரட்டன் மகாபலிபுரம்' சொகுசு விடுதியில் இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஜெர்மன் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட செஸ் போர்டுகள் ஜரோப்பிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. ஒரு செஸ் போர்டின் விலை ரூ. 75 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு போட்டியில் எத்தனை பேர்?: இரண்டு அரங்குகள் மொத்தம் 708 சதுரங்க பலகையுடன் தயார் நிலையில் உள்ளது. முதல் அரங்கில் 49 போட்டிகளும், இரண்டாவது அரங்கில் 128 போட்டிகளும் நடைபெறும். ஒரு போட்டிக்கு இரண்டு அணி, ஒரு அணியில் நான்கு நபர்கள் என எட்டு நபர்கள் ஒரு போட்டியில் இடம் பெறுவார்கள். 4 போட்டிகளுக்கு ஒரு நடுவர் இருப்பார். போட்டி நடுவர் , துணை தலைமை நடுவர் என அரங்கில் ஒரு நேரத்தில் 210 நடுவர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விவரம்: செஸ் போட்டியை டிக்கெட் முன்பதிவு செய்துகொண்டு, பார்வையாளர்கள் நேரடியாகவும் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்கள் மொபைல் ஃபோன் உள்பட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்ல அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விலை
நேரடி ஒளிபரப்பு: டிஜிட்டல் செஸ் போர்டுகளில் வீரர்களின் ஒவ்வொரு காய் நகர்தல்களும் சென்சார் உதவியுடன் தனித்தனி லேப்டாப்களில் பதிவாகி, அதிலிருந்து இணையம் வழியாக நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. தொலைக்காட்சியில் தூர்தர்ஷன் சேனலிலும், யூ-ட்யூப்பில் @Doordarsan Podhigai, @fide மற்றும் @Chessbase India சேனில்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அட்டவணைகளும், முடிவுகளும்: போட்டி அட்டவணை தினமும் காலை 10 மணிக்கு முன், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம். போட்டி முடிவுகளையும் அதே இணையத்தளத்தில் பார்த்துக்கொள்ளலாம். இன்று தொடங்கும் இத்தொடர், மொத்தம் 11 சுற்று போட்டிகளுடன் வரும் ஆக. 9ஆம் தேதி நிறைவடைகிறது. தொடரின் இறுதியில் புள்ளிப்பட்டியலில் முன்னணியில் இருக்கும் நாடுகள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
- முதல் சுற்று - ஜூலை 29
- 2ஆம் சுற்று - ஜூலை 30
- 3ஆம் சுற்று - ஜூலை 31
- 4ஆம் சுற்று - ஆக். 1
- 5ஆம் சுற்று - ஆக். 2
- 6ஆம் சுற்று - ஆக். 3
- 7ஆம் சுற்று - ஆக். 5
- 8ஆம் சுற்று - ஆக். 6
- 9ஆம் சுற்று - ஆக். 7
- 10ஆம் சுற்று - ஆக். 8
- 11ஆம் சுற்று - ஆக். 9
போட்டி விதிகள்:செஸ் ஒலிம்பியாட் தொடர் கிளாஸிக்கல் விதிகளின்கீழ் நடைபெறுகிறது. ஒவ்வொரு வீரரும் 90 நிமிடங்களுக்குள் 40 நகர்தல்களை செய்திருக்க வேண்டும். அதன்பின், போட்டியாளர் எதிராளியிடம் டிரா செய்ய பரிந்துரைக்கலாம்.
மிரட்டுமா இந்தியா:இந்திய அணி கடந்த இரு ஆண்டுகளாக ஆன்லைனில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டது. 2020ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்ட இந்தியா, 2021ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது.