நைராபி (கென்யா):20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகத் தடகள சாம்பியன்ஷிப் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், நீளம் தாண்டுதல் இறுதிச்சுற்றுப் போட்டி இறுதி நாளான நேற்று (ஆக. 22) நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய வீராங்கனை ஷைலி சிங், 6.59 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். சுவீடன் நாட்டைச் சேர்ந்த மஜா அஸ்காக் 6.60 மீட்டர் தாண்டி தங்கத்தை தட்டிச்சென்றார்.
இப்போட்டியின் மூன்றாவது சுற்றில் ஷைலி சிங், 6.59 மீட்டரைத் தாண்டி தன்னுடைய அதிகபட்ச சாதனையை பதிவுசெய்தார். ஆனால், நான்காவது சுற்றில் மஜா அஸ்காக் 6.60 மீட்டர் நீளத்தை தாண்ட, ஒரு செ.மீட்டர் வித்தியாசத்தில் ஷைலி சிங் தங்கத்தை தவறவிட்டார். மஜா அஸ்காக் நடப்பு ஐரோப்பிய ஜூனியர் சாம்பியன் என்பது கவனிக்கத்தக்கது.
17 வயதுதான் ஆகிறது...
இப்போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஷைலி சிங் கூறுகையில், "6.59 மீட்டர் நீளத்தை விட அதிகமாக நான் தாண்டி இருந்தால், தங்கத்தை வென்றிருப்பேன். தங்கப் பதக்கம் வெல்வது குறித்தும், வென்றால் மைதானத்தில் இந்திய தேசிய கீதம் ஒலிப்பது குறித்தும் என்னுடைய அம்மா கூறியிருந்தார். ஆனால் என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லை.
எனக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால், அடுத்து கொலம்பியாவில் (2022) நடைபெற இருக்கும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் தொடரில் நிச்சயம் தங்கம் வெல்வேன். மேலும், அடுத்தடுத்து நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடுமையாகப் பயிற்சி பெற உள்ளேன்" என்றார்.
துணையிருக்கும் தாய்
தடகள விளையாட்டுக்குள் நுழைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "பள்ளியில் தடகளப் போட்டிகளில் பங்கேற்று வந்தேன். தடகளத்தில் விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார். எனக்கு விருப்பம் என்றேன். இதையடுத்து, 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் என்னை லக்னோவில் உள்ள விளையாட்டு விடுதியில் அவர் சேர்த்துவிட்டார். பின்னர், 2018ஆம் ஆண்டில் பயிற்சி முகாமில் இணைந்துவிட்டேன்" என்றார், ஷைலி சிங்.