கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் நான்காவது மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய குத்துச்சண்டையின் தந்தை என அறியப்படும் மறைந்த முன்னாள் ஆசிய சாம்பியன் ஹவா சிங்கின் பேத்தி நூபுர் கலந்துகொண்டுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த இவர், 75 கிலோ எடைப் பிரிவில் விளையாடி, ஹிமாச்சல பிரதேச்சத்தைச் சேர்ந்த சந்தியாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அவர் உத்தரகண்ட் வீராங்கனை நேஹா சவுகானை ஆர்.எஸ்.சி முறையில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். போட்டியில் வீரர்களை நாக் அவுட்டிலிருந்து காப்பாற்றுவதற்கு நடுவரால் போட்டியை நிரூத்துவதுதான் ஆர்.எஸ்.சி முறையாகும்.
இவரது தாத்தா ஹவா சிங் 1960, 1970களில் ஆசிய அளவில் குத்துச்சண்டை போட்டிகளில் தனது ஆதிகத்தை நிலைநாட்டியவர். 1961 முதல் 1972 வரை தொடர்ந்து 11 முறை தேசிய அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றது மட்டுமின்றி பாங்காக்கில் 1966, 1970களில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் குத்துச்சண்டைப் பிரிவில் அடுத்தடுத்து தங்கம் வென்று அசாத்திய சாதனைப் படைத்த அவர் ஆகஸ்ட் 14, 2000இல் மறைந்தார்.