2019-ஆம் ஆண்டிற்கான புரோ கபடி தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. இத்தொடரின் 71ஆவது லீக் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி புனேரி பால்டன் அணியுடன் மோதியது.
தொடக்கத்தில் இரு அணி வீரர்களும் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்திற்கு மேல் ஹரியானா அணியின் அட்டாக் பிரிவு எதிரணியின் டிஃபென்ஸை நடுங்கவைத்தது. பதிலடி கொடுக்கும் வகையில் புனேரி பால்டன் அணியும் தனது அட்டாக்கின் மூலம் புள்ளிகளை பெற்று வந்தது. ஆனால் முதல் பாதி முடியும் தருணத்தில் புனேரி அணி ஆல்-அவுட் ஆனதால் 18-11 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி முன்னிலை பெற்றது.
அதன் பின் தொடர்ந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தனது டிஃபென்ஸ் பிரிவையும் வலுப்படுத்திய ஹரியானா அணி எதிரணியின் அனைத்து வியூகங்களையும் உடைத்தெறிந்து தனது புள்ளி கணக்கை உயர்த்த தொடங்கியது. குறிப்பாக ஹரியானா அணியின் விகாஸ் கொண்டோலா சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதன் மூலம் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஆட்டநேர முடிவில் 41- 27 என்ற புள்ளிகள் அடிப்படையில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 41 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது. புனேரி பால்டன் அணி 25 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க...#PKL2019: மீண்டும் தோல்வியின் பாதையில் தமிழ் தலைவாஸ்..!