இந்த ஆண்டுக்கான ஃபார்முலா ஒன் கார் பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்துப்பட்டு வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, பஹ்ரைன் என இரண்டு பந்தயங்கள் முடிந்த நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் சீன கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா ஒன் பந்தயம் இன்று நடைபெற்றது.
இதில், மெர்சிடஸ் அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் ஹாமில்டன், வேல்டரி பொட்டாஸ் மற்றும் ஃபெராரி அணியை சேர்ந்த வெட்டல் மூவருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், காரை மிகவும் வேகமாக ஓட்டிய ஹாமில்டன் பொட்டாஸை விட ஆறு வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஹாமில்டன் 1 மணிநேரம், 32 நிமிடம் மற்றும் 06 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம் சீன கிராண்ட் பிரிக்ஸ் தொடரை இவர் 6ஆவது முறையாக வென்றுள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக மெர்சிடஸ் அணியை சேர்ந்த சக வீரர் வேல்டரி பொட்டாஸ் 1 மணிநேரம், 32 நிமிடம் 12 வினாடி மற்றும் 552 மணித்துளிகளில் இலக்கை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தில் ஃபெராரி அணியைச் சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல் 1 மணி நேரம் 32 நிமிடம் 19 வினாடிகள் மற்றும் 744 மணித்துளிகளில் கடந்தார்.இதன் மூலம் நடந்து முடிந்த மூன்று பந்தயங்களிலும் மெர்சிடஸ் அணியின் ஹாமில்டன் 68 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அதே அணியை சேர்ந்த பொட்டாஸ் 62 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திலும், மேக்ஸ் வெர்ஸ்டாப்பென் 39 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அணிகளின் பட்டியலில், மெர்சிடஸ் அணி 130 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. 73 புள்ளிகளுடன் ஃபெராரி இரண்டாவது இடத்தையும், 52 புள்ளிகளுடன் ரெட் புல் ரேஸிங் ஹோன்டா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நான்காவது ஃபார்முலா ஒன் கார்பந்தயம் அசர்பைஜானின் பகு நகரில் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.