சென்னை: உலக செஸ் வரலாற்றில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கு தகுதி பெற்ற மூன்றாவது இளம் வயது நபர் என அனைவராலும் அறியபடும் நபராக உருவெடுத்துள்ளார் குகேஷ். கடந்த 2019ல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற குகேஷ் தற்போது இந்திய செஸ் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் 37 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்து வந்த விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கான உலக தரவரிசை பட்டியலில் தற்போது குகேஷ் 2758 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார். அண்மையில் நடந்து முடிந்த செஸ் உலக கோப்பை தொடரில் அவர் கால் இறுதி ஆட்டம் வரை முன்னேறி இருந்தார். தற்போது உலக தரவரிசையில் டாப் -10 வரிசையில் இடம் பிடித்துள்ள குகேஷ் கொரோனா காலகட்டத்தில் செஸ் விளையாட்டு சார்ந்த முக்கியமான அம்சங்களில் கிராண்ட் மாஸ்டர் பிரசான்னாவுடன் கவனம் செலுத்தியதே இந்த முன்னேற்றத்திற்கு காரணம்.
குகேஷின் இந்த சாதனை குறித்து அவருடைய பயிற்சியாளர் விஷ்ணு கூறியதாவது; “இவ்வளவு சிறிய வயதில் பல சாவல்களை கடந்து வருவது என்பது கடினமான ஒன்று. ஆனால் இந்த சாதனை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதோடு மிகவும் பெருமையாக உள்ளது. அவர் மேலும் முன்னேற வேண்டும் என்பது எனது விருப்பம் எனவும், திறமை என்பது இருந்தாலும் கூட அவருடைய தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி இதன் மூலமாகவே அவர் இந்த இடத்தை அடைந்துள்ளார் என்றார்.