இந்திய பைக் பந்தய வீரர் சி.எஸ். சந்தோஷ், பைக் ரேலி பந்தயங்களில் இந்தியா சார்பில் தொடர்ந்து பங்கேற்றுவருகிறார். டாக்கர் ரேலி பந்தயத்தில் தொடர்ந்து பங்கேற்றுவரும் இவர் சவால் மிகுந்த அந்தப் பந்தயத்தை மூன்று முறை நிறைவு செய்துள்ளார். அதிலும் கடந்த 2018ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடான செனிகல்லில் நடைபெற்ற டாக்கர் ரேலி பந்தயத்தில் சந்தோஷ் 34ஆம் இடம் பிடித்தார்.
இதனிடையே பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சந்தோஷ் தனது ரேஸ் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,
”எனக்கு பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளது. நான் சிறுவயதாக இருந்தபோதே எனது வாழ்க்கை சாகசங்கள் மிகுந்த ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவ்வாறு எனது இளம் வயது இல்லாத காரணத்தால் பைக் ரேஸை தேர்ந்தெடுத்தேன். அதன்பின் என் வாழ்வில் சாகசங்கள் நிறைந்த அனுபவங்கள் கிடைத்தன.
நான் கல்லூரியில் பயின்றபோது முதலில் கியர் இல்லாத பைக்கையே ஓட்டிச் செல்வேன். அதன்பின் எனது தந்தை எனக்கு பைக் வாங்கிக் கொடுத்தார். பின்னர் வேகத்தின் மீதான எனது ஆர்வம் அதிகரித்தது. இதனால் அந்த பைக்கை வைத்து நான் தெருக்கள், சாலைகளில் பந்தயத்தில் ஈடுபட்டேன். ஆனால் இந்த பந்தயம் எனக்கு சரியானது இல்லை என்பதை உணர்ந்து பைக் பந்தயங்களில் பங்கேற்க விரும்பும் வீரர்களுக்கு அகாடமி இருப்பதை அறிந்தேன். பின்னர் எனது 19ஆவது வயதில் டிவிஎஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன்” என்றார்.