பாரீஸ் : களிமண் தரை டென்னிஸ் தொடரான பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் கிரீஸ் நட்சத்திர வீரர் சிட்சிபாஸ் வெற்றியுடன் தொடங்கி உள்ளார்.
டென்னிஸ் விளையாட்டில் உயர்ந்த அந்தஸ்து கொண்ட தொடராக கருதப்படுவது கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும். ஆண்டுதோறும் 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடைபெறுகின்றன. ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் அமெரிக்கன் ஓபன் ஆகியவை அந்த 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்களாகும்.
இதில் ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் நடைபெறும். பெரும்பாலும் ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடைபெறும். சிலநேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த தேதிகளில் இருந்து போட்டி தள்ளிப்போகலாம்.
அதேபோல் மே முதல் ஜூன் வரையில் பிரெஞ்சு ஓபன் டென்னிசும், ஜூன் முதல் ஜூலையில் விம்பிள்டன் டென்னிசும் நடைபெறும். ஆண்டின் இறுதியில் (ஆகஸ்ட்- செப்டம்பர்) அமெரிக்கன் ஓபன் நடைபெறும். ஓர் ஆண்டில் இந்த 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்களையும் வெல்ல வேண்டும் என்பதே ஒவ்வொரு டென்னிஸ் வீரரின் மிகப் பெரிய கனவாக இருக்கும்.
அந்த வகையில் மற்ற கிரண்டாஸ்லாம் தொடர்களை காட்டிலும் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் என்னவென்றால் களிமண் தரையில் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுவதே இதன் சிறப்பாக கூறப்படுகிறது. நடப்பு சீசனுக்கான பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரெஞ்சு ஓபனில் ஸ்பெயின் ஜாம்பவான் ரபெல் நடால் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 2005ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் அறிமுகமான நடால் இதுவரை 14 முறை சாம்பியன் பட்டம் வென்று உள்ளார். பிரஞ்சு ஓபன் டென்னிசில் 112 ஆட்டங்களில் வெற்றி பெற்று உள்ள நடால் வெறும் 3 ஆட்டங்களில் மட்டுமே தோல்வியை சந்தித்து உள்ளார்.