உலகெங்கிலும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. இதுவரை இப்பெருந்தொற்றிற்கு உலகம் முழுவதிலும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
மேலும் இப்பெருந்தொற்றால் உலகம் முழுவதும் நடைபெறவிருந்த பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக ஃபார்முலா ஒன் எனப்படும் கார் பந்தயங்களின் ஒன்பது தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜூன் மாதம் இறுதியில் நடைபெறவிருந்த பிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸ் தொடரும், தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக ஃபார்முலா ஒன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து ஃபார்முலா ஒன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூலை 28ஆம் தேதி தொடங்குவதாக இருந்த பிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸ் 2020, உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து ஃபார்முலா ஒன் கூட்டமைப்பின் தலைவர் சேஸ் கேரி கூறுகையில், "உலகில் நிலவிவரும் அசாதாரண சூழல், ரசிகர்களின் பாதுகாப்பு காரணமாக ஜூலை மாதம் நடைபெறவிருந்த பிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸ் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிரெஞ்சு ஃபார்முலா ஒன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவர்களின் முடிவுக்கு ஃபார்முலா ஒன் கூட்டமைப்பைச் சார்ந்த அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பை வழங்குகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இந்தக் கோடையில் லா லிகா தொடங்கப்படாது: ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சர்