சண்டிகர்: இந்திய தடகள வீரர் மில்கா சிங் தனது 91ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு 11:30 மணியளவில் காலமானார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் சண்டிகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு திடீரென கடுமையான குறைந்தது. இதைத்தொடர்ந்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் புதன்கிழமை (ஜூன் 16) அவருக்கு கோவிட்-19 தொற்று குணமடைந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டார். எனினும் அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்துவந்தனர்.
இதற்கிடையில் அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானது. அவரது உடலிலும் ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சு விட சிரமப்பட்டார். இதனை உறுதிப்படுத்திய மருத்துவமனை வட்டாரங்கள் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார் எனத் தெரிவித்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
மில்கா சிங் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "அவரது மறைவு இதயத்தைக் கனக்க செய்கிறது. அவரின் போராட்ட வாழ்க்கையும், குணத்தின் வலிமையும் அடுத்த தலைமுறை இந்தியர்களுக்கு ஊக்கமளிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "தேசத்தின் கற்பனையை கைப்பற்றிய மற்றும் இந்தியர்களின் இதயங்களில் சிறப்பு இடத்தைப் பெற்ற ஒரு மகத்தான விளையாட்டு வீரரை நாங்கள் இழந்துவிட்டோம். விளையாட்டில் அவரது எழுச்சியூட்டும் ஆளுமை கோடிக்கணக்கானவர்களையும், தன்னையும் நேசிக்க வைத்தது" என கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டர் பதிவில், "மில்கா சிங் உலக தடகளத்தில் தனக்கென ஒரு அழிக்க முடியாத அடையாளத்தை வைத்திருக்கிறார். அவரை இந்திய விளையாட்டுகளின் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒருவராக தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு (ஜூன் 13) மில்கா சிங்கின்மனைவி நிர்மல் கவுர் மருத்துவனையில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.