பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த லீவிஸ் ஹேமில்டனுக்கு 2020ஆம் ஆண்டு மறக்க முடியாத ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. பிரிட்டன் கார் பந்தயத்தில் மூன்று டயர்களுடன் எல்லைக் கோட்டை கடந்தது, அதிக (95) பந்தயங்களில் வெற்றி, ஏழு முறை பார்முலா ஒன் சாம்பியன் எனப் பல்வேறு சாதனைகளை இந்த ஆண்டு லீவிஸ் ஹேமில்டன் படைத்துள்ளார்.
இந்நிலையில், லீவிஸ் ஹேமில்டனுக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மெர்சிடிஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக லீவிஸ் ஹேமில்டன் இந்த வாரம் பஹ்ரைனில் நடைபெறவுள்ள பார்முலா ஒன் பந்தயத்தில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"திங்கள்கிழமை (நவ.30) காலை அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு இரண்டாம் முறை கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டபோதும் கரோனா உறுதி செய்யப்பட்டது.