பர்மிங்ஹாம்: காமன்வெல்த் தொடரில் நேற்றுடன் ஐந்து நாட்கள் நிறைவடைந்த நிலையில், இன்று (ஆக. 3) ஆறாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இதுவரை, இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலங்கள் என 13 பதக்கங்களுடன் ஆறாவது இடத்தில் நீடிக்கிறது. இந்தியாவுக்கு மட்டும் நேற்று இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்த நிலையில், அதில் ஒரு தங்கம் வெல்ல டேபிள் டென்னிஸ் இந்திய ஆடவர் அணியும் முக்கியக்காரணமாகும்.
சிங்கப்பூரை சிதறடித்த இந்தியா: சிங்கப்பூர் அணிக்கு எதிரான இறுதிச்சுற்றில் மொத்தம் ஒரு இரட்டையர் பிரிவு போட்டியும், மூன்று ஒற்றையர் பிரிவு போட்டியும் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற இரட்டையர் பிரிவுப்போட்டியில் சத்தியன் ஞானசேகரன் - ஹர்மீத் தேசாய் ஜோடி, 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மிரட்டியது.
அடுத்து, நடைபெற்ற ஒற்றையர் பிரிவு போட்டியில் சிங்கப்பூர் வீரரிடம், இந்திய வீரர் சரத் கமல் 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு ஒற்றையர் பிரிவில் சத்தியன் ஞானசேகரன் 3-1 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றது. வெற்றியைத் தீர்மானிக்க நடைபெற்ற ஒற்றையர் பிரிவுப் போட்டியில், ஹர்மித் தேசாய் 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை உறுதிசெய்தார்.
புயலுக்குப் பின் அமைதி: இந்நிலையில், தமிழ்நாட்டைச்சேர்ந்தவரும், காமன்வெல்த் தொடரில் தங்கப் பதக்கம் வென்றவருமான சத்தியனிடம், வெற்றிக்கு சில மணிநேரத்திற்குப் பின் ஈடிவி பாரத் ஊடகம் பிரத்யேகமாக நேர்காணல் செய்தது. அப்போது சத்தியன் ஞானசேகரன்,"எனது உணர்வை சொல்ல வார்த்தைகளே இல்லை" என்று கூறிவிட்டு சில நிமிடங்கள் அமைதியானார்.
தொடர்ந்து பேசிய அவர்,"இன்றைய வெற்றி எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. காமன்வெல்த்தில் தொடர்ந்து தங்கத்தை தக்கவைத்தது அற்புதமான ஒன்று. நைஜீரியா, சிங்கப்பூர் ஆகிய அணிகளை வென்று ஆதிக்கம் செலுத்தியது அனைவருக்கும் பெரிய வெற்றியாக அமைந்தது.