ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாட தீவிரம் காட்டினார்.
இதனால், அவர் 51 கிலோ எடைப் பிரிவுக்கான தேர்வுப் போட்டியில் தனக்கும், மேரி கோமிற்கும் போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்தி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு கடிதம் எழுதியது பெரும் சர்ச்சையானது.
நிகாத் ஜரீனின் அழைப்பை ஏற்க முதலில் மேரி கோம் மறுத்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் நிகாத் ஜரீன் - மேரி கோம் இடையே தேர்வு போட்டி டெல்லியில் நடைபெற்றது.
இதில் மேரி கோம், 9-1 என்ற புள்ளிக் கணக்கில் நிகாத் ஜரீனை வீழ்த்தி, ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்நிலையில் தனது குத்துச்சண்டை பயணம் குறித்தும், மேரிகோம் குறித்தும் நிகாத் ஜரீன் நமது ஈடிவி பாரதத்திற்கு பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் இதோ.
கேள்வி: உங்களுக்கும் மேரி கோமிற்க்கும் கடந்த சில மாதங்களாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து முரண் இருந்து வந்தது. தற்போது அவர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். அது குறித்து உங்களது கருத்து என்ன?
பதில்: எனக்கு அவர் மீது எவ்வித கோபமும் இல்லை. மேரி கோம் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.
கேள்வி: தடகள வீராங்கனையாக இருந்து நீங்கள் திடீரென குத்துச்சண்டை வீராங்கனையாக மாறியது எப்படி?
பதில்: எனது பயணத்தை முதலில் தடகள வீராங்கனையாகதான் நான் தொடங்கினேன். 100, 200 மீட்டர் போட்டிகளில் தான் பங்கேற்று வந்தேன். ஒருமுறை நிஸாம்பாத்தில் நடந்த சம்பவம் ஒன்று எனது விளையாட்டுப் பயணத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியது.